நூற்றாண்டு கட்டிடத்தை புனரமைக்க 2 கோடி நிதி: அரசாணை வெளியீடு

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியாக, நூற்றாண்டு பழமையான கொதிகலன் அலுவலக கட்டிடத்தை புனரமைக்க 2.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பொதுப்பணித்துறை, கொதிகலன் இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ெசயல்பட்டு வந்தன. இந்த பழமையான கட்டிடங்களில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கடந்த 2013ல் ஹூமாயூன் மகால் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. தற்போது, வரை விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடம் சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை உள்ளது.

அதேபோன்று, பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கொதிகலன் இயக்க அலுவலகமும் முறையாக பராமரிக்கப்படாததால் இடியும் நிலையில்தான் உள்ளது. குறிப்பாக, கட்டிடத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்தும், பெரும்பாலான பகுதிகள் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு வர்தா புயலில் கொதிகலன் இயக்கக சிலாப் உடைந்தது. இதை தொடர்ந்து அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதற்கிடையே, கொதிகலன் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க 2.10 கோடி நிதி கேட்டு கடந்தாண்டு நிதித்துறைக்கு பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், நிதித்துறையிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால், அந்த கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, தமிழக அரசு 2.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, விரைவில் டெண்டர் விடப்பட்டு புனரமைப்பு பணிகளை தொடங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.  

ஆபத்தான கட்டிடமும் புனரமைப்பு

நூற்றாண்டு பழமையான பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடமும் முறையாக புனரமைக்கப்படாததால் கட்டிடங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் மேற்கூரை பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அந்த கட்டிடத்தை புனரமைக்க 2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த நிதியை கொண்டு கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Related Stories: