கோரிக்கைகளை வலியுறுத்தி 15-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 200வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவகர்நகர், காந்தி நகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி மூலம் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த பகுதி தாழ்வான பகுதி என்பதால் லேசான மழை பெய்தாலே குளம் போல் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துவிடும். இதனால் இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் பொதுநலச்சங்கத்தினர் ஆகியோர் சென்னை மாநகராட்சி 15வது மண்டல அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், மண்டல அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதி தாழ்வான பகுதி. மழை காலங்களில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. நாங்கள் 4 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி கடந்த 20 ஆண்டுக்கு முன்பு ஊராட்சியாக இருந்தபோது தெரு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. குழாய் சேதமடைந்ததால் சரிவர தண்ணீர்வரவில்லை. எனவே, குடிநீர் குழாய்களை சீரமைக்கவேண்டும். தெருக்கள் தோறும் குடிநீர் குழாய் அமைக்கவேண்டும். இப்பகுதியை சேர்ந்த பலர் ராஜிவ்காந்தி சாலைக்கு நடந்து சென்றுதான் பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர். ராஜிவ்காந்தி சாலைக்கு செல்ல மினி பஸ் இயக்க வேண்டும். பாதாள சாக்கடை வசதி செய்து தரவேண்டும். இந்த கோரிக்கைகளைதான் நாங்கள் மனுவாக கொடுத்துள்ளோன்’’  என்றனர்.

Related Stories: