குகை பகுதியில் வெள்ளிப்பட்டறையில் இருந்து குழந்தை தொழிலாளி மீட்பு

சேலம், செப்.12: சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் பணி புரிந்து வந்த குழந்தை தொழிலாளியை, அதிகாரிகள் மீட்டனர். குகை, லைன்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் வெள்ளிப்பட்டறைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக, தொழிலாளர் உதவி ஆணையருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உத்தரவின் பேரில், குகை மற்றும் லைன்மேடு பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறைகளில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சாந்தி, ரங்கசாமி, ஞானசேகரன், சீனிவாசன்,  சிவக்குமார் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட களப்பணியாளர்  யுவராஜ், சைல்டு லைன் பணியாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு வெள்ளிப்பட்டறையில் குழந்தைத் தொழிலாளி பணியில் ஈடுபடுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, உடனடியாக குழந்தை விடுவிக்கப்பட்டு குழந்தை நலக் குழு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், குழந்தைத் தொழிலாளியை பணிக்கு அமர்த்திய வெள்ளிப்பட்டறை உரிமையாளர் மீது குழந்தைத் தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன்கீழ் வழக்கு தொடரப்படவுள்ளது. அபாயகரமான தொழில்களில் 18 வயதுக்கும், இதர தொழில்களில் 14 வயதுக்கும் உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது சட்டவிரோதம் எனவும், அவ்வாறு பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால், வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு எதிராக கடுமையான வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: