மனம் எனும் மாயலோகம்-பருவநிலை மாற்ற உளச்சிக்கல்

நன்றி குங்குமம் தோழி

மீனா - கணவருடைய வேலை நிமித்தமாக சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார். முதலில் இடமாற்றம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில மாதங்களில் வந்த குளிர்காலத்தில் மீனாவுக்கு மிகுந்த மனச்சோர்வு உண்டானது.குளிர் பிரதேசங்களில் வின்டர் ப்ளூஸ் (Winter blues) ஏற்படுவது இயல்பானதுதான் என்றாலும் சிலருக்கு அதன் தாக்கம் அதிகம் இருக்கும். இது பருவநிலை மாற்ற உளச்சிக்கல் (Seasonal Affective Disorder). இது, பருவகால மாறுதல்களால் ஏற்படும் ஒருவகை மனச்சோர்வு ஆகும். குளிர்கால டிப்ரஷன் என்றும் அழைக்கப்படும்.

SAD-ல் மனச்சோர்வின் எல்லா அறிகுறிகளும் இருக்கும் என்பதுடன் சுழற்சி முறையில் ஏற்படும் (seasonal pattern). பொதுவாக குறைவான சூரிய வெளிச்சம் இருக்கும் குளிர்காலத்தில் தொடங்கும் டிப்ரஷன் பிறகு வசந்தகாலத் தொடக்கத்தில் மறையும். மிகச் சிலருக்கு மட்டுமே வெயில் காலத்தில் இவ்வகை மனச்சோர்வு ஏற்படக்கூடும்.

யாருக்கு ஏற்படும்?

ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. எந்த வயதிலும் ஏற்படக்கூடும் என்றாலும் 18 - 30 வயதில் இருப்பவர்களுக்கு SAD தொடங்கும் சாத்தியங்கள் அதிகம். இதன் தாக்கத்தினால் வீட்டிலும் வேலையிலும் அன்றாடப் பணிகளில் சுணக்கம் உண்டாகும். இதற்கு சிகிச்சை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் ஏற்படுகிறது?

குளிர்காலத்தின் குறுகிய பகல் பொழுதுகளும் குறைந்தசூரிய ஒளியும் மூளையில் சில வேதியியல் சமன்குலைவுகளை உண்டாக்குகிறது. இவை நம் உயிரியல் கடிகாரத்தில் (biological clock) ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. SAD பெரும்பாலும் பூமத்திய ரேகையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பகுதிகளில் வாழும் மனிதர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

1. அதிக அசதி, தூக்கம் ஏற்படும்.மாவுச்சத்து நிரம்பிய உணவுகள் மீது மிகுவிருப்பம் உண்டாகும்.

2. மனச்சோர்வு மற்றும் சோகமாக உணர்தல்.

3. முன்பு ஈடுபாடு கொண்ட விஷயங்கள் மீது விருப்பமின்றி இருப்பது.

4. உணவுப் பழக்கங்களில் மாற்றம், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணுவது.

5. அதிக நேரம் தூங்குவது போன்று தூக்கப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுவது.

6. அதிக நேரம் தூங்கினாலும் அசதியாக மந்தமாக உணர்வது.

7. பிறர் கவனிக்கத்தக்க சில அர்த்தமற்ற வெற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது - உதாரணமாக கைகளைத் திருகிக் கொள்வது அல்லது மெதுவான நடை, மந்தமான பேச்சு போன்றவை.

8. குற்றவுணர்ச்சி கொள்வது.

9. தான் எதற்கும் உதவாக்கரை என நினைப்பது.

10. சிந்தனை மற்றும் முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படுவது.

11. தற்கொலை எண்ணங்கள் உண்டாகக்கூடும்.

சிகிச்சை முறைகள்

பருவநிலை மாற்ற உளச்சிக்கலு (Seasonal Affective Disorder) க்கான சிகிச்சை முறைகளாக லைட் தெரபி, ஆன்டி டிப்ரஸன்ட் மருந்துகள், மனநல ஆலோசனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதன் தாக்கத்தை பொறுத்து மனநல நிபுணர் உங்களுக்கு வழிகாட்டுவார்.லைட் தெரபி என்பது ஒரு பிரகாசமான ஒளி உமிழும் சாதனத்தின் மூலம் சிகிச்சை அளிப்பதாகும். குளிர்காலத்தில் தினமும் காலை சுமார் 20 நிமிடங்கள் இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

ஒன்று முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே முன்னேற்றம் காணப்படும் என்றாலும், குளிர்காலம் முழுவதும் இச்சிகிச்சையை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். ஒருவேளை இதற்கு முந்தைய காலங்களில் SAD ஏற்பட்டிருந்தால், பருவகால மாற்றத்தின் ஆரம்ப நாட்களிலேயே, தற்காப்பு நடவடிக்கையாக உடனடியாக லைட்தெரபி செய்துகொள்ளத் தொடங்கலாம்.

பேச்சு தெரப்பி(Talk therapy) என்றும் அழைக்கப்படும் சைக்கோதெரபியும் பெரும் அளவில் உதவும். குறிப்பாக மருந்துகளோ லைட்தெரபியோ மட்டுமில்லாமல் அத்துடன் மனநல ஆலோசனைகளும் செய்து கொள்பவர்கள் தாக்கத்திலிருந்து விரைவில் மீள்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

சில நேரங்களில் பிற உடலியல் சார்ந்த நோய்களின் அறிகுறிகள் SAD -ன் அறிகுறிகளை ஒத்து இருக்கும். எனவே தவறாக கணிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக Hypothyroidism மிகவும் மந்த நிலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும். எனவே அசட்டையாக இல்லாமல் சரியான மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை மேற்கொள்வது

அவசியம்.

சிகிச்சை மட்டுமின்றி அன்றாட வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள கீழ்க்கண்ட குறிப்புகள் உதவும். அலுவலகத்தில் உங்கள் இருக்கையை சூரிய ஒளி வரும் ஜன்னலுக்கு அருகில் மாற்றிக் கொள்வது. இயற்கைச்சூழலில் நடைப்பயிற்சி செய்வதும் நல்லது. தினமும் குறைந்தபட்சம் 20 - 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது.

ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல்நலனை காக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சீரான தூங்கும் பழக்கம் அவசியம். (Sleep hygiene) உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது நலம். சுறுசுறுப்பாக இருப்பது உடல்நலனையும் மனநலனையும் காக்கும்.

Related Stories: