நன்றி குங்குமம் டாக்டர்
பச்சைப் பயறில் புரோட்டீன் சத்து மட்டுமின்றி இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், ஃபைபர் போன்ற உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. மேலும், இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் விளங்குகிறது. இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்புச் சத்து காணப்படுவதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களும் பச்சைப் பயறை தினசரி எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
மேலும் பச்சைப்பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகளையும் சரிசெய்கிறது.ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் பச்சைப்பயறு உதவுகிறது. எனவே, அன்றாடம் பச்சைப் பயறு அல்லது பாசிப்பருப்பை உணவில் சேர்த்து வருவது நல்லது.பச்சைப்பயறில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. எனவே, இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட உணவில் பச்சைப்பயறை சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, ரத்தசோகை ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபடலாம்.பச்சைப்பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சைப்பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சைப்பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும்போது, அத்துடன் ஒரு கிண்ணம் பச்சைப் பயறையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுக்குள் வரும். தொகுப்பு : பா. பரத், சிதம்பரம். 