×

புதிய மதகு அமைக்கும் பணி நிறைவு கிருஷ்ணகிரி அணையில் 52 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஆக.15:  கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதையொட்டி, 52 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகு, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடைந்த மதகு அகற்றப்பட்டு, 12 அடி உயரத்தில் தற்காலிக மதகு பொருத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர், ரூ3 கோடி மதிப்பில் புதிய மதகு அமைக்கும் பணியை, கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக தற்காலிக மதகில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ராடுகளை காஸ் வெல்டிங் மூலம் அகற்றும் பணி ஜூன் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய மதகு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 3 கட்டங்களாக இரும்பு தளவாடங்கள் காஸ் வெல்டிங் மூலம் பொருத்தும் பணிகள், காப்பர் ஸ்லாக் எனப்படும் செம்பு துகள்கள், இயந்திரங்கள் மூலம் செலுத்தி அசுத்தங்கள் அகற்றும் பணிகளும், மெட்டலைசிங்க் எனப்படும் துருப்பிடிக்காத வெள்ளை நிற வண்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

 தொடர்ந்து ரசாயன பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில், எபோக்சி வகை கருப்பு நிற வண்ணம் பூசும் பணிகளும், மதகில் பராமரிப்பு மேற்கொள்ள ஏதுவாக புதிய இரும்பு ஏணிகள் பொருத்தும் பணிகளும் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று புதிதாக பொருத்தப்பட்ட மதகு உட்பட 8 மதகுகள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மெய்யழகன், கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சையத் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய மதகு அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது, மதகில் வைக்கப்பட்டுள்ள காஸ் வெல்டிங்கின் திடம் குறித்து நவீன இயந்திரம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மற்ற 7 மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், அணையில் 52 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு