நன்றி குங்குமம் டாக்டர்
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!
இந்த நாள் மிகச் சிறப்பாக அமைந்தது என்பதை நாம் அனுபவிக்கக்கூடிய தளங்கள்தான் முதல் மூன்றும். உடல் இலகுவாக, சொன்ன வண்ணம் இயங்கிக்கொண்டும், ஒருவித துள்ளலுடனும், பெரும்பாலான வேலைகளை ஒரு நடனம் போல இயல்பாக நிகழ்த்த முடிந்தால், உடலில், அதாவது அன்னமய கோசத்தில் இன்பத்தை அடைந்திருக்கிறீர்கள் என்றே பொருள். சுறுசுறுப்பும் உற்சாகமும் பாட்டும், சிறு விசிலும், களைப்பின்றியும் இந்த நாள் முடிந்தால், உங்கள் பிராணமய கோசத்தில் அதன் முழுமையை அனுபவித்து இருக்கிறீர்கள் எனக்கொள்க. எவ்வித பதற்றமுமின்றி மனம் ஒரு ரம்யமான இசை போல ஒழுகிச்சென்று, மீண்டும் மீண்டும் உதட்டிலும் மனத்திலும் புன்னகையை நிறைத்து வைத்திருந்தால், உங்கள் மனோமய கோசம் அதன் முழுமையை அடைந்து ததும்பி நிற்கிறது என்றே உணர்க. இதற்கு நேர்மாறாக இந்த மூன்று கோசத்திலும் நிகழ்ந்தால் அந்த நாள் ஒரு ஒவ்வாத நாளாக நாம் அனுபவிக்கிறோம். ஆக, நமது வாழ்வின் பெரும்பகுதி முதல் மூன்று தளத்தின் முழுமையிலும், போதாமையிலும்தான் அமைந்து இருக்கிறது. ஒரு ஹடயோகியானவன், சாதகன் அடையக்கூடிய அடிப்படைப் பயன் என்பது இந்த முக்கோணத் தளத்தை இணைப்பதுதான். ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டிக்கப்பட்டிருந்த இந்த முக்கோணத்தின் முனைகள் மிகச்சரியாக, ஒரு பயிற்சித் திட்டத்தின் மூலம், இணைக்கப்பட்ட உடனேயே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இந்த முக்கோண வடிவம் (உடல், உயிராற்றல், மனம்) முழுமையை வெளிப்படுத்துகிறது, அந்த சாதகன் சாமானியன் யாரை விடவும், அனைத்திலும் ஒரு படி மேலானவனாகிறான். எனினும், இந்த மூன்று தளங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே ஒரு முழு வாழ்வைத் தந்துவிடாது என்பதால், யோகமரபும், வேதாந்த மரபும் மேலும் சில தளங்களைச் சொல்கிறது, நான்காவது தளமான விஞ்ஞானமய கோசம் பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம், இந்த நான்கு கோசங்களும் ஒன்றில் ஒன்றென சரியாக அமைகையில், நாம் ஆனந்தமய கோசம் எனும் தளத்தில் சென்று அமர்கிறோம்.இந்த ஐந்தாவது தளத்தைப் பற்றி விளக்குவதில் இருக்கும் மாபெரும் சவாலே, எத்தனைச் சொற்களைப் போட்டு நிறைத்தாலும் இன்னும் சொல்வதற்கு மீதமிருக்கும் நிலை அது. ஆகவே, அத்தனை மகான்களும் தாங்கள் உணர்ந்த அல்லது அனுபவித்த இந்த நிலையைப் பற்றி, உவமையாக சிலவற்றைச் சொல்ல முயற்சி செய்கின்றனர்.உதாரணமாக இரண்டு உவமைகள் இங்கே பேசப்படுவதுண்டு. ஒன்று தேனின் சுவை - நான் எவ்வளவுதான் தேனின் சுவை பற்றி உங்களுடன் மணிக்கணக்காக உரையாடினாலும், இனிமை, இனிப்புச் சுவை, தித்திப்பு, என்கிற வார்த்தைகளை உபயோகித்தாலும், இனிப்பு பற்றி அறிந்திருக்காத ஒருவருக்குச் சொல்லி புரியவைக்கவே முடியாது. ஆனால், எந்த மொழியும் தெரியாத ஒருவருக்குக்கூட ஒரு சொட்டுத் தேனை கொடுத்தால் அவர் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும். இதுதான் ஆனந்தமய கோசம் பற்றி சொல்ல முடியக்கூடிய முதல் உவமானம். அடுத்ததாக, இறைநிலை அல்லது இரண்டற்ற இறையுடன் கலந்தநிலை என்பதைக் குறிப்பிட ‘உப்புப் பதுமை கடலில் கரையும்’ உவமானம். உபநிடதங்கள் நம் இருப்பை அன்னமயம், பிராண மயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என படிப்படியாக ஏறுவரிசையில் சுட்டுகிறது. இதில் ‘மயம்’ என்பது ‘மயட்’ என்கிற வேர்ச்சொல்லின் திரிபு. இதற்கு ‘ஒன்றாலேயே ஆனது’ அல்லது ‘ஒன்று மற்றொன்றாக மாறுவது, நிரப்பப்படுவது’. என பொருள் ஆக, ஆனந்த மயமான நிலையை அடைவதையே, அதாவது ஆனந்தமே உருவான பிரம்மத்தை அல்லது முழுமுதல் நிலையை அடைவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது நமது மரபு. யோக மரபு பிரம்மத்தை அடைவதைக் குறித்து எதுவும் பேசுவதில்லை. அது முற்றிலும் சமாதிநிலை அல்லது கைவல்ய நிலை குறித்து மட்டுமே பேசுகிறது.ஆக ஒரு பயிற்சி என்பது படிப்படியாக ஒருவரை இந்த ஐந்து கோசங்களிலும், ஒரு மாபெரும் மாற்றத்தை, ஏற்படுத்தி, சிறிது சிறிதாகவேனும் நம்மை மேம்பட்ட நிலையை நோக்கி அழைத்துச் செல்ல முடிந்தால் அப்படியான ஒரு பயிற்சித் திட்டத்தை நாம் வாழ்நாள் முழுவதும் கைகொள்ளலாம். அதில் யோகப்பயிற்சிகள் மிக சாதகமாக இருப்பதால், நமக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை தேர்ந்து எடுக்கலாம். பயிலலாம், அதன் பயன்களை அடையலாம். எனினும் சரியான யோகக்கல்வி என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி நம் அனைவருக்குமே, தயக்கமும் குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு நோய்க்கான மருந்தை தேர்ந்தெடுப்பதில், நம் குழந்தையின் மேல்படிப்புக்கான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில், எப்படி நாம் அடிப்படையான சில அளவீடுகளை வைத்திருக்கிறோமோ, அதே போலத்தான் ஒரு நல்ல யோகக் கல்வியை அல்லது பயிற்சியைத் தேர்ந்தெடுப்பதிலும் சில அளவீடுகள் இருக்கின்றன. அது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.
உதர கர்ஷண ஆசனம்இன்று அனைவரும் பயிற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு ஆசனத்தைத் தெரிந்து கொள்வோம். நாம் இங்கு அறிமுகம் செய்யும் ஆசனப் பயிற்சிகளில் பெரும்பாலும் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது என்பதால் அனைவருக்குமான ஒன்று ‘’உதர கர்ஷண ஆசனம் ‘’ சவாசனம் எனும் நிலையில் படுத்துக்கொண்டு உடலை நன்றாக தளர்வு செய்த பின்னர் இரண்டு மூட்டுப்பகுதியையும் மடக்கி, கால்களை ஒட்டி வைத்தபின், மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியிடும் போது, இடுப்பு பகுதி மற்றும் மடக்கிய கால்களை ஏதேனும் ஒரு புறம் முற்றிலுமாக சாய்த்து, முடிந்தால் தரை வரை கொண்டு செல்லவும். பின்னர் , மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மைய நிலைக்கு வரவும். இதேபோல மறுபுறமும் உடலை திருகி மீண்டும் மைய நிலைக்கு வந்தால் ஒரு சுற்று என கணக்கிட்டுக்கொள்ளவும்.இப்படியாக மொத்தம் ஐந்து முதல் ஏழு சுற்றுகள் வரை ஒருவர் முயற்சி செய்யலாம்.உடலில் நாம் தேக்கி வைத்திருந்த கடினத்தன்மை , இறுக்கங்கள் ,முக்கியமாக அடிமுதுகு மற்றும் அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் உள்ள சமநிலையின்மையை நீக்கி வெறும் பதினைந்து நாட்களில் ஒருவித சுறுசுறுப்பு தன்மையை , சீரான ரத்த ஓட்டம் மற்றும் ஜீரண ஆற்றலை அதிகரிக்க செய்வதில் இது முதன்மையான பயிற்சி.