உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் மற்றும் இளம் பருவ வயதினர் சிலர் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல்  மெலிந்த தேகத்துடன் ஆரோக்கியமற்று காணப்படுகிறார்கள். இவர்கள்  ஆரோக்கியமான உணவு மூலம் எவ்வாறு தங்களது உடல் எடையை அதிகரித்துக்கொள்ளலாம் என நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா நம்முடன் பகிர்ந்துகொண்டவை:

புரதச் சத்துகள் நிறைந்த  பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா  போன்ற  கொட்டை உணவுகளை தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கொண்டைக்கடலை, பச்சைப்பயறு வகைகளை உணவில்  அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம்.    கேழ்வரகுக்  கூழ் செய்து பால், பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம், சிறிது நெய் சேர்த்து   ஒரு திடமான  கஞ்சியாகச்  செய்து   அருந்தலாம். அல்லது  கேழ்வரகு  சேமியா  உணவுகள்,  கேழ்வரகு புட்டு   போன்றவற்றை  எடுத்துக் கொள்ளலாம். அரிசி  உணவுகள்  என்று  எடுத்துக் கொள்ளும்போது  வெள்ளை அரிசியை குறைத்துக் கொண்டு , சிவப்பரிசி  உணவுகளை  அதிகம்  எடுத்துக் கொள்ளலாம்.  உதாரணத்துக்கு இட்லி  அரைக்கும்போது  சிவப்பரிசி  சேர்த்து  அரைத்துக் கொள்ளலாம்.  சிவப்பரிசி புட்டு, சிவப்பரிசி அடை, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம்.

அதுபோல் எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம் “இளைத்தவனுக்கு  எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு  என்று” அந்த வகையில்   எள் உருண்டையை தினசரி  எடுத்துக்கொள்ளலாம்.மேலும்,   எள்ளுப்பொடியை  சூடான சாதத்தில்  கலந்து  நெய் சேர்த்து  சாப்பிடலாம் எள்ளுத் துவையல்  செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் கூட்டுவதில் உளுந்து பெரும்பங்கு  வகிக்கிறது. உடலுக்குத் தேவையான  நல்ல புரொட்டீனை  உளுந்து கொடுக்கிறது.  எனவே,  உளுந்தங்களி, உளுந்து மாவு உருண்டை அல்லது உளுந்தும் பாசிப்பருப்பும் சேர்த்து  வறுத்து   அரைத்து  நாட்டுச் சர்க்கரை சேர்த்து லட்டு  செய்து சாப்பிடலாம்.

 பழச்சாறு வகைகளில்  வாழைப்பழம்,  சப்போட்டா, மாம்பழம், பலாப்பழம், அவகோடா  எனும்  வெண்ணெய்ப் பழம், ஆப்பிள்   இவையெல்லாம்  எடையை கூட்டக்கூடியவை.  எனவே,  இவற்றுடன்  தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுத்துக்கொள்ளலாம். அதுபோல்  காய்ந்த  திராட்சை, அத்திப்பழம்,  பேரீச்சம்பழம், பாதாம்  இவற்றை  சிறிதளவு  வெந்நீரில்  ஊற வைத்து  அதனுடன் முந்திரி சேர்த்து மேலும்,  தினசரி ஒரு வகை  பழம்  சேர்த்து  பால் கலந்து அடித்து  மில்க் ஷேக்  பருகிவர உடல்  எடை நன்கு கூடும்.

நேந்திரம் பழம்  எடையை அதிகரிக்க  மிக  நல்ல உணவு.  நேந்திரம் பழத்தைத் துண்டுகளாக்கி  அதனுடன்  தேன் கலந்து சாப்பிடலாம். தற்போது  நேந்திரம்  பழம் பவுடர்  வகையிலும் கிடைக்கிறது. அதனை வாங்கி  கஞ்சி செய்து சாப்பிடலாம்..   பெரியவர்கள்   சத்து மாவுக் கஞ்சியுடன்  நேந்திரம்  பழத்தின்  பொடியையும் சேர்த்து   கஞ்சியாகவோ அல்லது  ரொட்டியாகவோ   செய்து சாப்பிட்டு வரலாம்.

தினசரி  உணவில்  நெய் சேர்த்துக்  கொள்வது மிக அவசியம்.  வேக வைத்த பருப்பு, சப்பாத்தி, தோசை போன்றவற்றில்  நெய் சேர்த்து சாப்பிடலாம். அதுபோல், சீஸ், பன்னீர், வெண்ணெய்  இவற்றையும்  அடிக்கடி உணவில்  சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையைக் கூட்டும் கிழங்கு வகைகளில்  உருளைக்கிழங்குதான் முதலிடத்தில் உள்ளது. எனவே,   பொரித்த உருளைக்கிழங்கை  தவிர்த்துவிட்டு, வேக வைத்து, அதனுடன் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி  சேர்த்து  ஸ்டஃப்ட்  சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.மேலும், சர்க்கரை  வள்ளிக்கிழங்கு,  சேப்பங்கிழங்கு போன்றவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தயிரில்  தினசரி  லஸ்ஸி  செய்து   சாப்பிட்டு வந்தால்   உடல் எடை நன்கு அதிரிக்கும். அதே  சமயம், தயிரில்  லஸ்ஸி  செய்யும்போது  சர்க்கரைக்கு பதில்  பனங்கற்கண்டு  சேர்த்து  அடித்து சாப்பிடுவது  மூளை வளர்ச்சிக்கும் நன்மை செய்யும். அசைவ உணவுகளை  எடுத்துக்கொண்டால் சிக்கன், மட்டனை  தவிர்த்து

விட்டு  கடல் உணவுகளான   சிறுவகை மீன்கள், இறால்  போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.  முட்டை  எடுத்துக் கொள்ளும்போது  வெள்ளை  முட்டையை தவிர்த்துவிட்டு, நாட்டுக்கோழி  முட்டைகளை  சேர்த்துக் கொள்ளலாம்.

இவையெல்லாம்  உடல் எடையை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கிய உணவுகளாகும்.  அதேசமயம்,  இந்த  உணவுகளை  தினசரி எடுத்துக் கொள்பவர்கள்  சிறுசிறு  உடற்பயிற்சிகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.  உடல் உழைப்பு எதுமில்லாமல்  இந்த உணவுகளை மட்டும்  எடுத்துக்கொண்டுவந்தால்,  இது கெட்ட கொழுப்புகளாக  மாறிவிடும்  வாய்ப்புகள்  உண்டு.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: