அன்னவாசலில் களைகட்டிய மீன்பிடி திருவிழா: 5 கிலோ எடையில் மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சி

விராலிமலை: அன்னவாசல் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று பல்வேறு வகையான 2 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட நாட்டு மீன்களை அள்ளி சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புதூர் கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பப்பட்டது. இதையடுத்து சுற்று பகுதியை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து இருசக்கர வாகனம், லோடு ஆட்டோக்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என குடும்பம் குடும்பமாக அதிகாலையிலேயே பெரிய கண்மாய் கரையில் திரண்டிருந்தனர்.

தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர் வெள்ளை வீசியதையடுத்து (உத்தரவு) கண்மாய் காரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி உபகரணங்கள் உடன் கண்மாய்க்குள் இறங்கி வலை, ஊத்தா, பரி என பல்வேறு சாதனங்களை கொண்டு ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். பிடித்த மீன்கள் ஒவ்வொன்றும் கிலோ முதல் 5 கிலோ வரை இருந்தது என்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கின. பிடித்த மீன்களை சாக்கு பையில் கட்டி கொண்டு மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர்.

கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதால் பெரும்பாலான குளங்கள் நீர் வற்றிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா என்பது இப்பகுதியை பொருத்தவரை ஒருசில ஊர் குளங்களில் மட்டுமே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதூர் பெரிய, சிறிய கண்மாயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் அதிகாலை முதல் காத்திருந்து குளத்துக்குள் இறங்கி மீன்களை அள்ளிச் சென்றனர்.

Related Stories: