ஜாதியை கூறி திட்டியதாக மாணவி புகார் காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பணி புரிபவர் சண்முகராஜா (49). தென்காசி அருகே ஆலங்குடியை சேர்ந்த இவர் மீது  மாணவிகள் ஏற்கனவே பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், சில மாணவிகள், ஆளுநருக்கும் புகார்களை அனுப்பியுள்ளனர். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. வரலாற்று துறையில் எம்ஏ இரண்டாமாண்டு படிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த  மாணவி ஒருவரை, உதவி பேராசிரியர் சண்முகராஜா, உருவத்தை சொல்லி கேலி செய்வதும், கரும்பலகையில் படம் வரைந்தும் பல்வேறு வகையில் துன்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாணவி கேட்ட போது, அந்த மாணவியின் ஜாதியை சொல்லி திட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவி,  பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் புகார் அளித்தார். அதற்கு சண்முகராஜா, மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இதுகுறித்து மாணவி, நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார், உதவி பேராசிரியர் சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

Related Stories: