‘‘ஆரூரா... தியாகேசா...’’ கோஷம் விண்ணதிர திருவாரூரில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர்: ‘‘ஆரூரா.... தியாகேசா...’’ கோஷம் விண்ணதிர திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது.  இந்த தேரின் மரப்பகுதி 4 அடுக்குகளை கொண்டது. மொத்தம் 96 அடி உயரம் கொண்டது. தேரின் மொத்த எடை 300 டன்.இந்நிலையில், தியாகராஜர் சுவாமி கோயிலில் இந்தாண்டு பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நேற்று ஆயில்ய நட்சத்திரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு தியாகராஜர் அஜபா நடனத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர்  தனித்தனியாக 4 தேர்களில்  வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை தேரடி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

பின்னர் அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்தனர். தொடர்ந்து ஆழித்தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைத்து பூஜை நடந்தது. காலை 7.30 மணிக்கு மங்கள இசையுடன் வாணவேடிக்கை முழங்க ஆழித்தேரோட்டம் தொடங்கியது.

அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘‘ஆரூரா... தியாகேசா...’’ என விண்ணதிர முழங்கினர். தேரோட்டத்தை கலெக்டர் சாரு  வடம் பிடித்து துவக்கி வைத்தார். எம்பி செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேரின் பின்னால் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

* வீதியை கடக்க 2 மணி நேரம்

ஆழித்தேர் ஒரு வீதியை கடக்க 2 மணி நேரம் ஆனது. அதேபோல் திருப்பத்தில் திரும்ப 1 மணி நேரம் ஆனது. திருப்பத்தில் தேர் நின்றதும் ராட்சத இரும்பு பிளேட் போடப்பட்டு கிரீஸ் தடவி, வீலை சுழற்றி பெல் பொறியாளர்கள் மூலம் தேர் திருப்பப்பட்டது. தேர் கிளம்பியதிலிருந்து 50 அடி தூரம் இடையிடையே சிவப்புக் கொடி காட்டப்பட்டு ஹைட்ராலிக் பிரேக் மூலம் நிறுத்தப்பட்டு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன் பின்னர் பச்சைக் கொடி காட்டி தேர் புறப்பட்டது. தேர் செல்லும் வீதியில் மின்தடை செய்யப்பட்டிருந்தது.

Related Stories: