வயிற்றை சுற்றியுள்ள தசைகள்... காப்பது எப்படி?!

நன்றி குங்குமம் தோழி

நமது உடல் இயங்குவதற்கு மிக முக்கியக் காரணம் தசைகள்தான் (Muscles) என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? நாம் ஓரிடத்திலிருந்து நடக்கவேண்டும் எனில் முதலில் மூளையில் இருந்து சமிக்ஜைகள் (Signals) தசைகளுக்கு வரும். அதன் பின்னரே தசைகள் இயங்கி நடக்க உதவும். இப்படி நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தசைகளுக்கும் ஒரு செயல் இருக்கிறது என்பதால், எல்லா தசைகளையும் நாம் வலிமையாய் வைத்திருக்க வேண்டியது முக்கியம். அதைவிட முக்கியமானது, இந்த எல்லா தசைகளுக்கும் உதவக்கூடிய கோர் தசைகளை வலிமையாய் வைத்திருப்பது. ஆம், அத்தனை முக்கியமான இந்த கோர் தசைகள் நம் உடம்பில் எங்கே அமைந்திருக்கிறது, அதன் முக்கியத்துவம் என்ன, பயன்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தசைகளும், கோர் தசைகளும்...

தன் இரு முனைகளையும் எலும்பினோடு ஒட்டியிருக்கும் தசைகள் தலை முதல் கால் வரை நம் உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். உதாரணமாக, முகத்தை சுற்றியுள்ள தசைகள் சிறியதாய் இருக்கும். நாம் சிரிப்பதற்கு, முறைப்பதற்கு, அழுவதற்கு, சாப்பிடுவதற்கு என இதன் வேலைகள் மாறுபடும். அதேபோல் கால்களில் உள்ள தசைகள் நாம் நடக்க, ஓட, குதிக்க என பல வேலைகளை செய்யும். இந்த வரிசையில் வயிற்றை சுற்றி பெரிய பெல்ட் போன்ற தசைகள் இருக்கிறது. இதனை மருத்துவத்தில் ‘Core Muscles’ என்று அழைப்போம்.

பாதுகாக்கும் கோர் தசை...

ஒரு கூட்டு தசைகளாய் மேல், கீழ், முன், பின் என இணைந்து இடுப்பு எலும்பு மற்றும் முதுகு எலும்பின் நிலையான (stability) தன்மையை பாதுகாக்கிறது. மேலும் வயிற்றில் உள்ள உள் உறுப்புகள் (வயிறு முதல் கருப்பை, குடல் வரை) அனைத்தையும் பாதுகாக்கிறது.

கோர் தசைகளின் அமைப்பு...

கோர் தசைகளின் அமைப்பானது ஒரு மூடிய டப்பாவை போல இருக்கும்.1.மேலே (அதாவது, நுரையீரலுக்கு கீழே உள்ள தசை, இது மூச்சு விடுவதற்கு

உதவும்) ஒரு பெரிய தசை போர்வை.

2.கீழே நம் கருப்பை, வயிறு, சிறுநீரகம் என அனைத்து உள்உறுப்புகளையும் தாங்கும் தசைகள்.

3.வயிற்றுக்கு முன், வயிற்று தசைகள், பெரிய விரிப்புகளாய் விரிந்து இடுப்பில் போய் முடியும். இது தான் ‘சிக்ஸ் பேக்’ தசைகள். இதனை கொழுப்பு படிமங்கள் மறைத்திருக்கும். இதனை நாம் தொப்பை என சொல்வோம்.

4.முதுகிலும் பெரிய மற்றும் சிறு தசைகள் சேர்ந்து ஒரு பெரிய பை போன்ற அமைப்பு முறை இருக்கும்.

5.மொத்தம் இதில் 29 ஜோடி தசைகள் இருக்கின்றன. இந்த மொத்த தசைகளும் சேர்ந்து முதுகெலும்பிற்கு நிலையான தன்மையை கொடுக்கிறது.

வேலைகளும் பயன்களும்...

*நம் உடலின் பாங்கை (Posture) நல்லமுறையில் அமைக்க இந்த தசைகளின் உறுதி அமைப்பு உதவுகிறது.

*உறுதியான கோர் தசைகள் விளையாட்டு வீரர்களுக்கு விளையாடும் போது உதவி செய்யும். அதாவது, எந்த ஒரு (வெளி) விளையாட்டுக்கும் பொதுவாய் தேவைப்படக் கூடிய தசை கோர். எனவே சுலபமாய், எந்த ஒரு காயமும் இல்லாமல் விளையாடலாம்.

*இந்த தசைகள் தான் நம் முதுகெலும்பின் காப்பு வளையம். இதுவே நம் முதுகெலும்பின் மீது அதிக சுமைகள் போகாமல் பாதுகாக்கும். நம் முதுகெலும்பை ஸ்திரமாய் வைக்க உதவும்.

*முதுகெலும்பு மட்டுமல்லாமல் நம் இடுப்பு எலும்புகளையும் ஸ்திரமாய் தாங்கும் ஆற்றல் இந்த தசைகளுக்கு உள்ளது.

*தடுப்பாய் இருந்து உள்உறுப்புகள் வெளியே வராதமாதிரியும் காக்கும்.

*நாம் கை கால்களை பயன்படுத்தி எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் கோர் தசைகளின் பங்கு இருக்கும். உதாரணமாக, நாம் கைகளை உயர்த்தி துணி காயப்போடும்போது, கைகள் தோள்பட்டை தசைகள் மட்டும் வேலை செய்வதில்லை. இந்த தசைகள் சுலபமாய் இயங்குவதற்கே கோர் தசைகளின் பலம் தேவை.

*இந்த தசைகள் உறுதியாய் இருந்தால் நமக்கு கால் கைகளிலோ, முதுகிலோ காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு காயம் அவ்வளவு எளிதில் ஏற்படாது.

*மேலும் நம்மால் நம் வேலைகளை சுலபமாய், சூப்பராய் செய்யமுடியும். அதாவது, நம் performance level அதிகரிக்கும். இது விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.

*சரியான முறையில் எலும்புகளுக்கு வரும் விசைகளை, எடையை பிரித்துக் கொடுக்கிறது. இதனால் முதுகெலும்பிற்கு சேதம் விளையாமல் பாதுகாக்கிறது.

எப்படி உறுதியாக்குவது...?

*அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி அவரவரின் உடல் தேவைக்கு, ஆற்றலுக்கு ஏற்றவாறு கோர் தசைகளுக்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொண்டு தினமும் வீட்டில் செய்து வரலாம்.

*டிவி யூடியூப் பார்த்தோ, வாட்ஸ்அப் வீடியோக்களை பார்த்தோ உடற்பயிற்சிகளை தானே செய்வது தவறு. மேலும் இது பக்க விளைவுகளை உண்டு செய்யும்.

*ஆரம்ப நிலையிலிருந்து கடினமான பயிற்சிகள் வரை இருக்கிறதென்பதால், விளையாட்டு வீரர்கள், பெண்களுக்கு, ஆண்களுக்கு என அனைவருக்கும்

பயிற்சிகள் மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்வோம்...

பெண்கள் கருத்தரித்து மாதம் செல்லச் செல்ல வயிறு பெரிதாய் மாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். ஏனென்றால் வயிறு பெரிதாகும்போது கோர் தசைகள் விரிந்து, தளர்ந்து போகும். இதனால் எடை முழுதும் பின்னால் முதுகுக்கு செல்லப்பட்டு முதுகு எலும்புகளில் அதிக அழுத்தம் கொடுப்பதால் முதுகு வலி வருகிறது. இது கருவுற்றவர்களுக்கு மட்டுமல்ல, அதிக தொப்பை இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

எனவே ஆரோக்கியமாய் வாழ்வது என்பது நம் உணவு முறையில் மட்டுமில்லை, நல்ல உடற்பயிற்சியிலும் உள்ளது. மேலும் தசைகளை பற்றிய நுணுக்கமான விஷயங்களை தெரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவதன் மூலம் நாம் இன்னும் அதிக ஆற்றலுடன் வாழ்வாங்கு வாழலாம், யாரையும் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாய் இயங்கலாம்.

Related Stories: