வார்டு வரையறை செய்யும் போது ஒரு குடும்பத்தினர் ஒரே வார்டில் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும்போது கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், தந்தை ஒரு வார்டிலும், மகன் ஒரு வார்டிலும் இருக்கின்ற சூழ்நிலையும் அதில் இருக்கிறது. ஆக, இதையும் கவனத்தில் கொண்டு மறுவரையறை செய்கிறபோது, ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்தால், ஒரே வார்டில் வாக்குப் பதிவு செய்கிற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், அந்த காம்பக்ட், ஒரு வார்டு என்றால், அதைச் சுற்றியிருக்கிற பகுதிகளை உள்ளடக்கியதாக அந்த வார்டு இருக்க வேண்டும்.

ஒரு பகுதி ஒரு வார்டிலும், இன்னொரு பகுதி இன்னொரு வார்டிலும் இருக்கிற சூழ்நிலை இருக்கிறது’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘ஓர் ஊரில் செல்வாக்குமிக்க நபர் ஒருவர் இருப்பாரேயானால், இவர் ஒரு வார்டில் இருந்து கொள்ளலாம், இவரின் மனைவி அந்த வார்டில் நின்று வெற்றிபெற்றால் அது சரியாக இருக்கும் என்று தான் அதைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். அதனால், அந்த மாதிரியெல்லாம் இருக்கக்கூடாது என்று முன்னாள் முதல்வர் கேட்டிருக்கிறார். உங்களுடைய காலத்தில் தான் அது உருவாக்கப்பட்டது. 2017ல் நீங்கள்தான் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து, இதுமாதிரி தேர்தல் நடைபெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

எனவே, நிச்சயமாக அதையெல்லாம் சரி செய்ய நகராட்சி நிர்வாக துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய இரண்டு துறைகளின் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் இணைத்து ஒரு கமிட்டி  அமைத்து, அதில் ஒரு நல்ல முடிவை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் அந்த முடிவெடுத்தோம். ஆனால், அதற்குள் நீதிமன்ற உத்தரவின் காரணமாக உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. எனவே, உறுப்பினர் சொன்னது நல்ல கருத்து. நிச்சயமாக அதை ஏற்று கமிட்டியில் ஆலோசித்து, நிச்சயமாக செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: