மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே 15ம் தேதி முதல் மலை ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஏப்ரல் 15ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை தாண்டி, இதமான சூழலில் மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி, சிற்றருவிகளை ரசித்துக்கொண்டே இம்மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். மேலும், ஊட்டியில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதாலும், கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க உள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு செல்லும் மலை ரயிலில் பயணம் செய்ய சீட்டு கிடைக்காதவர்கள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஏப்.16 முதல் ஜூன் 25ம் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதேபோல், ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: