பல் பிடுங்கி சஸ்பெண்ட் ஆன ஏஎஸ்பி பல்வீர்சிங்கிற்கு ஆதரவாக `பேனர்’ வைத்த கிராம மக்கள்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்தவர் பல்வீர்சிங். இவர் மீது குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர்சிங் அம்பாசமுத்திரம் சரகத்தில் இருந்தபோது அவர் செய்த சாதனைகள், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பது குறித்த தகவல்கள் வாட்ஸ்அப்பில் வைரலானது. மேலும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்க முயற்சி எடுத்தது ஆகியவையும் சமூக வலைதளங்களில் வைரலானது.

பொட்டல் கிராமம், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட பலர் ஏஎஸ்பிக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை மீண்டும் அம்பாசமுத்திரம் பகுதியில் பணியாற்றிட உத்தரவிடக்கோரியும் வீடியோ பதிவிட்டிருந்தனர். நேற்று பாப்பாக்குடியை அடுத்த ஓ.துலுக்கப்பட்டி கிராமத்தில் ஏஎஸ்பிக்கு ஆதரவாக கிராம மக்கள் பேனர் வைத்தனர். அதில் “மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” என தலைப்பிட்டு ஏஎஸ்பி பல்வீர்சிங்கை அம்பாசமுத்திரம் பகுதியில் மீண்டும் பணியமர்த்திட அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை ஓ.துலுக்கப்பட்டியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயிலில் ஏஎஸ்பி பல்வீர்சிங்கின் போட்டோவை வைத்து தடைகளை தகர்த்தெறிந்து மீண்டும் அம்பாசமுத்திரம் மக்களுக்கு சேவை செய்திட அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏஎஸ்பி பல்வீர்சிங் டீமில் இருந்த ஒரு அதிகாரி வசூல் வேட்டை நடத்தியதை கண்டுபிடித்து ஏஎஸ்பி நடவடிக்கை எடுத்தார். இதனால் சில கருப்பு ஆடுகள் அவரை திட்டமிட்டு பழிவாங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் ஏஎஸ்பிக்கு ஆதரவு கருத்துகள் வலம் வருகின்றன.

Related Stories: