கம்பத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உட்பட ரூ.13.55 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்

*சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை, திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள்

*நிதி ஒதுக்கப்படவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

கம்பம் : கம்பம் நகரானது 01.10.1958ம் நாள் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டு, 25.01.1975 அன்று இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் 1920ன் கீழ் 22.05.1998 அன்று முதல் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. கம்பம் நகராட்சி 6.58 சதுர கி.மீ பரப்பளவுடன் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஒரு லட்சம் மக்கள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் கம்பம் நகர் வளர்ச்சிக்கு எந்த பணிகளும் நடக்காத நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த உடன் மக்கள் நலனிலும், நகர் வளர்ச்சிப் பணிகளிலும் அதிக அக்கரை காட்டி வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் கம்பம் நகரின் முன்னேற்றத்திற்கு, கடந்தாண்டு மட்டும் ரூ 1977 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள் செய்துள்ள நிலையில், தற்போது கம்பத்தில் ஆம்னி பஸ் நிலையம் உட்பட ரூ.13.55 ேகாடியில் 6 சிறப்பான வளர்ச்சித்திட்ட பணிகளை செய்ய முடிவு செய்துள்ளது.

கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும், மழைநீரும், சாக்கடை கழீவுநீரும் சாலையில் செல்லாமல், எவ்வித இடையூறுமின்றி வடிகால் வழியே செல்லும் வகையில் ரூ.410 லட்சத்தில் சேதமடைந்த மழைநீர் வடிகால்கள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ற நகர்பகுதி விரிவடைகிறது. தற்போது நகராட்சியின் விரிவாக்கப்பகுதிகளான நந்தகோபால்சாமி நகர், டிஎஸ்கே லேஅவுட், கிரிஷ்ணாபுரம் காலனி, கண்ணூரான் காலனி, வரதராஜபுரம், சங்கிலிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ 170 லட்சம் செலவில் மண்சாலைகளை வடிகால் வசதியுடன் கூடிய தார்ச்சாலையாகவும் மற்றும் பேவர்பிளாக் சாலையாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடலூர் அருகே லோயர்கேம்பில் 1955ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. பெரியாறிலிருந்து வரும் தண்ணீரை தடுப்பணை கட்டி தடுத்து நிறுத்தி, நீரேற்று நிலையம் மூலம் ராட்சத தொட்டிகளில் தேக்கி வைத்து, சுத்திகரிக்கப்பட்டு பின்னர் லோயர் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கம்பம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

நாளடைவில் மக்கள்தொகை பெருக்கம், குழாய்களில் உடைப்பு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் 2013&14 ன் கீழ் ரூபாய் 2.25 கோடி திட்ட மதிப்பீட்டில் சுருளிப்பட்டி முல்லைபெரியாற்றில் இரண்டு உறைகிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. இதில் லோயர்கேம்பிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மக்களின் நலன்கருதி சுருளிப்பட்டி தலைமை நிரேற்று நிலையத்தில் ரூ.250 லட்சத்தில் 4 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் நகராட்சி 33 வார்டுகளிலும் சுமார் 2000 தெருவிளக்குகள் உள்ளன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசாணைப்படி, நகராட்சிப்பகுதியில் உள்ள இந்த தெருவிளக்குகளை எல்ஈடி தெருவிளக்குகளாக மாற்றம் செய்ய மாநில நகர்புற அடிப்படை மேம்பாட்டுநிதி 6 ஆண்டு கடனுக்கு வழங்குகிறது. அதன்படி மின்சாரத்தை சேமிக்க கம்பம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரூ.50 லட்சம் செலவில் 20 வாட்ஸ் எல்இடி தெருவிளக்கு 500 அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் குடியிருப்பு கம்பம் காந்திஜி பூங்கா அருகே உள்ளது. இக்கட்டிடங்கள் பழமையானதாக உள்ளதாலும், கட்டிடத்தைச் சுற்றி ஆக்கிரமித்து தெருவோர காய்கறிக்கடைகள், பழக்கடைகள் அமைத்திருப்பதாலும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.225 லட்சத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் புதிய வணிக வளாகம், ஆணையாளர் குடியிருப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்கள் சென்னை, பெங்களூர் போன்ற நெடுந்தொலைவு பிரயாணங்களுக்கு அரசு பஸ்களை விட ஆம்னி பஸ்களில் செல்வதையே விரும்புகின்றனர். சென்னை, புதுச்சேரி, கோவை மற்றும் பெங்களூருக்கு கம்பம் பகுதியிலிருந்து தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை சுமார் 50க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் செல்கிறது.

இதற்கான முன்பதிவு நிலையங்கள் போக்குவரத்து மிகுந்த காந்திசிலைப் பகுதியிலிருந்து பொதுப் பணித்துறை அலுவலகம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் உள்ளதால், நாள்தோறும் மாலை நேரங்களில் ஆம்னி பஸ்களால் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் ஆம்னி பஸ்களுக்கு தனிநிறுத்தம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சியில் தற்போது கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட சந்தை அருகில், ரூ.250 லட்சத்தில் ஆம்னி பஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.நகராட்சியின் முத்தான இத்திட்டங்கள் குறித்து நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறுகையில், ‘‘ முதல்வர் மு.கஸ்டாலின் ஆட்சியில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கான நல்லபல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கம்பம் நகராட்சியில் ஒரு ஆண்டில் மட்டும் தார்சாலை அமைத்தல், விளையாட்டு பூங்கா, வாரச்சந்தை, குடிநீர் சீராக கிடைத்திட பகிர்மானக்குழாய்கள் பதித்தல், திடக்கழிவு மேலாண்மை, சமுதாயக்கழிப்பிடங்கள், காந்திஜி பூங்காவில் அபிவிருத்தி பணிகள் என ரூ.19.77 கோடிக்கு வளர்ச்சித்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.தற்போது ரூ.13.55 ேகாடியில் சிறப்பான 6 திட்ட பணிகள் செய்திட நிதி ஒதுக்கவேண்டி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை இயக்குநர் பொன்னையா ஆகியோரை சந்தித்து திட்ட மதிப்பீடு கோப்புகளை வழங்கியபோது,திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர், என்றார்.

Related Stories: