கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் தாறுமாறாக பணம் வசூலிக்கும் ஆட்டோக்கள்-நுகர்வோர் கூட்டத்தில் புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் தாறுமாறாக பணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுடனான 2023ம் ஆண்டின் முதல் காலாண்டு நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் மற்றும் பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசுகையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் இருக்கைகள் இல்லாததால் நோயாளிகள் வெகு நேரமாக நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து சிறுவங்கூர் கிராம பகுதியில் இயங்கி வரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் சென்று வர போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு நோயாளிகள் சென்று வர வாடகை ஆட்டோக்களில் தாறுமாறாக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து பொதுமக்கள் நலன் கருதி கட்டணம் நிர்ணயம் செய்து தர வேண்டும்.

   

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படுகின்ற மருந்து, மத்திரைகள் காலை, இரவு, மதியம் மற்றும் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரைகளில் எவ்வித குறிப்புகள் இல்லாமல் வாய்மொழியாகத்தான் கொடுக்கப்படுகின்றன. எனவே தனியார் மருத்துவமனையில் காகித கவர்கள் மூலம் காலை, இரவு என குறிப்பிட்டு கொடுப்பதுபோன்ற அரசு மருத்துவமனையில் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 

கள்ளக்குறிச்சி நகரத்தில் ஷேர் ஆட்டோ அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகர பகுதிலேயே ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு ஏசியுடன் கூடிய அரசு பேருந்து ஏற்கனவே இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.     

தொடர்ந்து மற்ற நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். அனைத்து மளிகை கடை, உணவுகூடங்கள் இதர கடைகளில் நுகர்வோர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெரு பகுதியில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இறுதியாக பேசிய  ஆட்சியர், நுகர்வோர்கள் தெரிவித்துள்ள அனைத்து புகார்கள், கோரிக்கைகள் மீது அந்தந்த துறை அலுவலர்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: