அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு யானையின் உடலை பொக்லைன் மூலம் குழிதோண்டி புதைத்த விவசாயி கைது

*10 மாதங்களுக்கு பிறகு அம்பலம்

அந்தியூர் : அந்தியூர் அருகே மின் வேலியில் சிக்கி இறந்த யானையின் உடலை பொக்லைன் மூலம் குழி தோண்டி புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள உள்ள பர்கூர் மலைபகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி உள்ளனர். குறிப்பாக ராகி,  மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு, உள்ளிட்ட பயிர்களையே அதிகம் பயிரிடுவர்.

இந்தப் பயிர்களை வனப்பகுதியில் இருந்து வெளிவரும் காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் மிதித்தும் தின்றும் சேதப்படுத்துவதன் காரணமாக, பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வேலிகள் அமைத்து  பயிர்களை பாதுகாப்பது வழக்கம். ஒரு சிலர் சட்டவிரோதமாக நேரடியாக மின்சாரத்தையே இந்த மின் வேலியில் செலுத்தி விடுகின்றனர்.

இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதி கோவில் நத்தம் கிராமத்தில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், அதனை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாகவும்  பர்கூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விசாரணை செய்த வனத்துறையினர் கோவில் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன் (58) என்பவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சுமார் 10 மாதங்களுக்கு முன்பு இவரது விவசாய நிலத்தில் உள்ள மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததாகவும், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டி யானையின்  உடலை புதைத்துவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் காட்டிய இடத்தில் வனத்துறையினர் தோண்டி பார்த்தனர். அப்போது மக்கிப்போன யானையின் எலும்புகள் கிடைத்தன. அவற்றை  வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் சடையப்பன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

 யானையின் பாகங்களை இன்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பிறகே இறந்தது ஆண் யானையா? பெண் யானையா?  என தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே யானையை குழிதோண்டி புதைக்க உதவிய பொக்லைன் இயந்திர ஓட்டுனர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பதெல்லாம் சடையப்பனுக்கு தெரியாததால், ஓட்டுனர் குறித்த தகவல் சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: