உத்திரமேரூர் திருப்புலிவனம் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: சட்டசபையில் சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல்

உத்திரமேரூர்: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில்போது உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசுகையில், ‘கலைஞர்  முதல்வராக இருந்தபோது 1990-1991ம் ஆண்டிலே உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் ஆகிய இரண்டு வட்டாரங்களையும் தொழிலில் பின் தங்கிய பகுதியாக அறிவித்து, அன்றைக்கு தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார். அந்த அடிப்படையிலே தொடர்ந்து வாலாஜாபாத் வட்டாரத்திலே பல தொழிற்சாலைகள் உருவாகி, பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது, திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய முதல்வருடைய ஆட்சியில், உத்திரமேரூர் வட்டாரம், திருப்புலிவனம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட அரசு நிலங்கள் அங்கேயிருக்கின்றன.

அதிலே சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு ஆவன செய்யப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘சிப்காட் நிறுவனம் இதுவரை 16 மாவட்டங்களில், ஏறத்தாழ 6 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 28 தொழிற் பூங்காக்களை, ஏறத்தாழ 38,538 ஏக்கர் பரப்பளவிலே உருவாக்கி நிர்வகித்து வருகிறது. பொதுவாக ஓர் இடத்திலே சிப்காட் அமைய வேண்டுமென்றுச் சொன்னால், அந்தப் பகுதியிலே இருக்கக்கூடிய அடிப்படை வசதிகளான தண்ணீர், மின்சாரம், நில அமைப்பு, ரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

அந்தப் பகுதியிலே தொழில் மனை தேவைகளும் இருப்பதை கருத்தில் கொண்டு, அத்தகைய சிப்காட் பூங்காக்களை அமைப்பதற்கு அரசு முன்வருகிறது. உறுப்பினர் சுந்தர் சொல்லக்கூடிய அந்தப் பகுதிகளை ஏற்கெனவே நானும் ஒரு முறை அவருடன் சென்று பார்த்திருக்கிறேன். அது தொழிற்சாலைகளை அமைப்பதற்கு, சிப்காட்டை உருவாக்குவதற்கு அது உகந்த இடமாகவே இருக்கிறது என்பதை நானும் அறிவேன். எனவே, வரக்கூடிய காலங்களில் அங்கே ஒரு சிப்காட் பூங்காவை உருவாக்குவதற்கு அரசு நிச்சயமாக ஆவன செய்யும்’ என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: