வாலாஜாபாத் 2வது வார்டில் பராமரிப்பில்லாத பாலாஜி நகர் பூங்கா: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் 2வது வார்டில் உள்ள பாலாஜி நகர் பூங்கா பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரண பொருட்கள் உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி பாலாஜி நகர், என்ஜிஓ நகர் ஆகிய பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா ஒன்று உள்ளன. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மெத்தை உள்ளிட்டவை உள்ளன.

மேலும் இந்த பூங்காவிற்கு, நாள்தோறும் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை, மாலை வேளைகளில், அதிகளவில் மக்கள் வருகின்றனர்.  

மேலும், நடைப்பயிற்சிக்கு வருவோர் அவர்களது குழந்தைகளை ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மெத்தை உள்ளிட்டவற்றில் விளையாட வைத்து வீட்டிற்கு அழைத்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்கா  பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகின்றன. இதில், ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பயன்பாடுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும், பூங்காவில் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாகவும் விளங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டு பூங்கா உள்ளது.

இது தற்போது முறையாக பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்படாததால், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து, குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக இல்லை. இதனால், பெற்றோர், குழந்தைகள் பூங்காவிற்கு அழைத்து வருவதில்லை. மேலும், இப்பூங்காவில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால், நடைபயிற்சி மேற்கொள்வதும் இல்லை. இதனால், இந்த பூங்கா மர்ம நபர்களின் கூடாரமாகவும், மது அருந்துபவர்களின் புகலிடமாகவும் மாறி உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் இந்த பூங்காவை முறையாக பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: