தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம்: பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு

கோவை: தமிழ்நாட்டில் முதமுறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் மேயர் தெரிவித்து உள்ளார். கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் இந்த நிதி ஆண்டில் தொடங்கப்படும். மாணவர்கள் கணிதத்தை எளிதாக செய்முறை மூலம் கற்கும் விதமாக வஉசி பூங்கா வளாகத்தில் கணிதமேதை ராமானுஜர் பெயரில் ராமானுஜம் கணித பூங்கா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மாநகராட்சியில் உள்ள 17 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 10 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.50 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம், மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: