மதுரை மாவட்டத்தில் சிகரெட், புகையிலை சட்ட தடையை மீறினால் கடும் தண்டனை

மதுரை: ஆண்டுதோறும் மார்ச் 9 சிகரெட் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு ‘உணவு வேண்டும், சிகரெட், புகையிலை அல்ல’ என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் டீன்ஏஜ் வயதினர் சிகரெட், புகையிலை உள்ளிட்ட தீங்கு விளைக்கும் பழக்கத்திற்கு எளிதாக ஆளாகின்றனர். சிகரெட்டில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நச்சு பொருட்கள், 200 விதமான விஷப்பொருட்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் 60 வகையான ரசாயன பொருட்கள் உள்ளது. ஒருவர் புகைக்கும் சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகை ‘‘இரண்டாம் தர புகையிலை புகை” எனப்படுகிறது.

இந்த இரண்டாம் தர புகையிலை புகை மூலம் புகைப்பழக்கம் இல்லாதவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தர மக்களுக்கும் நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அனைத்து விதமான புகையிலை பொருட்களும் தீமை விளைவிக்கக்கூடியது. சிகரெட் போல் பீடியும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. வாய் வழியே மெல்லப்படும் புகையிலை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை உருவாக்குகிறது. சிகரெட், புகையிலை பழக்கத்தின் கொடூர விளைவுகளில் இருந்து மக்களை காக்க தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிரமாக தடுப்பு

இதில் மதுரை மாவட்ட சுகாதார துறையின் நடவடிக்கைகள் மூலம் சிகரெட், புகையிலை உபயோகிக்க ஒருவர் முற்படுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிரமாக தடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சுகாதார பழக்க வழக்கம் மேம்படுத்துதல் மற்றும் நோய்கள் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுகாதார நலப்பணியாளர்கள் மூலம் சிகரெட், புகையிலை பழக்கத்தை மக்கள் கைவிடுவதற்கு உதவிகள், ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.

அந்தந்த சுகாதார மையத்திற்குட்பட்ட பள்ளிகளில் கலந்துரையாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் சிகரெட், புகையிலை பழக்கம் மக்களிடையே கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கிடங்கு அல்லது கடைகளின் நுழைவுவாயிலில் எச்சரிக்கை விளம்பர போர்டுகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் வைக்க சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்.

புகையிலை உயிரை கொல்லும் போன்ற நல எச்சரிக்கை வாசகங்கள் தெளிவாக எழுதி இருக்க வேண்டும். சிகரெட் அல்லது இதர புகையிலை தயாரிப்பின் ஒவ்வொரு பேக்கேஜ்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் எச்சரிக்கை படங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் சிகரெட், புகையிலை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர், விநியோகஸ்தர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அபராதம், சிறை

பொது இடங்களில் புகைக்கும் தனிநபருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த குற்றம் புரியும் தனி நபருக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஒருவர் முதல் முறையாக குற்றம் புரிந்தால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம். 2வது முறையாக குற்றம் செய்தால் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. சிகரெட், புகையிலை உற்பத்தியாளர் முதல் முறையாக குற்றம் புரிந்தால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம். 2வது முறையாக குற்றம் செய்தால் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்.

சிகரெட், புகையிலை மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் முதல் முறையாக குற்றம் புரிந்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம். 2வது முறையாக குற்றம் செய்தால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தாண்டு இதுவரை மதுரை மாவட்டத்தில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் புகை பிடித்த 374 பேருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கல்வி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 332 கடைக்காரர்களுக்கு ரூ.66,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புகையில்லா வளாகம்

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார் கூறியதாவது: சிகரெட், புகையிலை பழக்கத்தை கைவிடுதல் என்பது ஒருவரது உடல் நலத்திற்கு மட்டுமின்றி அவர்களை சுற்றி உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தன்னை தானே நேசிக்கும் ஒருவர் அவரது உடலை தானே சிதைக்க விரும்ப மாட்டார். நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாக்க மாட்டார். சிகரெட், புகையிலை பழக்கத்தை எந்த வயதில் கைவிட்டாலும் ஒருவர் தங்களது உடல் நலத்தில் முன்னேற்றம் அடைய முடியும். அதிக தாமதமாகி விடவில்லை என்று ஒருவர் முதலில் உணர வேண்டும்.

தபால் நிலையம், அரசு அலுவலகங்கள், மருத்துவ நிலையங்கள், உணவு விடுதிகள் போன்றவை ‘புகையில்லா வளாகம்’ என கடைபிடிக்கப்படுகிறது. இந்த வளாகங்களில் புகை பிடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பொது இடங்களில் புகைபிடிக்க தடை உள்ளது. 18 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது. கல்வி வளாகத்தில் இருந்து 100 அடி தூரத்திற்கு உட்பட்ட பரப்பளவில் சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது. சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் உறைகளில் சிறப்பு நல எச்சரிக்கை படங்கள் இல்லாமல் விற்பனை செய்ய கூடாது. இவ்வாறு கூறினார்.

விரைவில் வயது முதிர்வு

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், ‘சிகரெட், புகையிலை பழக்கம் உயிர் கொல்லி நோய்களின் தாக்குதலுக்கு இட்டு ெசல்லும். சிகரெட் பழக்கத்தால் இளைஞர்கள் தற்போது மலட்டுதன்மை பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆஸ்துமா, காசநோய், சுவாசப்பாதை நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. புகை பழக்கத்தை கைவிடுவதால் உணவின் சுவை அதிகம் உணரப்படும். 2 மணி நேரத்திற்கு பின் ஒருவரது உடலை விட்டு ‘நிக்கோடின் நச்சு’ வெளியேறி விடும். வாசனை நுகர்வு திறன் அதிகப்படும்.

உடல் இயக்க செயல்பாடுகள் எளிதாகும். சளித்தொல்லை தீரும். இருதய நோய்கள் மற்றும் நுரையீரல், வாய் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாக குறையும். மாரடைப்பு, மூளை செயலிழக்கும் வாதநோய் போன்ற நோய்கள் தாக்காது. சிகரெட், புகையிலை பழக்கத்திற்கு உட்பட்டோருக்கு விரைவில் வயது முதிர்வு ஏற்படுகிறது’ என்றனர்.

Related Stories: