விகேபுரம்: விகேபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் கூட்டம் புகுந்து கரும்புகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியிருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் விகேபுரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டு எருமை, காட்டுப்பன்றி, கரடி, மான், மிளா உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
குறிப்பாக யானைகள் கூட்டம் சமீபகாலமாக அனவன் குடியிருப்பு, அகஸ்தியர்புரம், கருத்தைபிள்ளையூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் விகேபுரம் டாணா அனவன்குடியிருப்பு நடுத்தெருவைச் சார்ந்தவர் விவசாயி முருகன் (56) என்பவருக்கு சொந்தமாக அதே பகுதியில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளார். தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு குட்டியுடன் 6 யானைகள் கூட்டம் புகுந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கரும்புகளை தின்றும் காலால் மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது.
இதனால், விவசாயிகள் மத்தியில் கவலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யானைகளால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில் வன விலங்குகள் விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்க அகழி அமைக்கவோ அல்லது சோலார் மின் வேலி அமைக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் கூறுகையில், ‘அனவன் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி யானைகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து பயிர்களை அழித்து சேதம் விளைவித்து வருகின்றன. இது தொடர்பாக வனத்துறைக்கு பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. இனிவருங்காலங்களிலாவது விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க இப்பகுதியில் வன விலங்குகள் புகாத வண்ணம் வனத்துறையினர் சோலார் மின் வேலிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.140 கிலோ முதல் 270 கிலோ வரை உணவு யானைகள் தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை அதிகம் விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.