ஓசூர் அருகே மாந்தோப்பில் முகாமிட்டிருந்த 5 யானைகள் விரட்டியடிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே மாந்தோப்பில் முகாமிட்டிருந்த 5 யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட யானைகள் அவ்வப்போது வருவதும், மீண்டும் வனத்துறையினரால் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்படுவதும் என வழக்கமாக உள்ளது. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி வழியாக, ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராம பகுதிக்கு நேற்று முன்தினம் 5 யானைகள் வந்தன. இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் முகாமிட்டிருந்தன.

இந்த பகுதியில் அச்செட்டிப்பள்ளி, மத்திகிரி, இடையநல்லூர், சூதாளம் என ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த யானைகள் தோட்டங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனக்குழுவினர், இந்த யானைகளை இரவு, பகலாக கண்காணித்து வந்தனர். கிராம பகுதி அருகேயுள்ள மாந்தோப்பில் யானைகள் முகாமிட்டிருந்ததால், கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர், மாந்தோப்பில் முகாமிட்டிருந்த 5யானைகளையும் கண்காணித்து வந்தனர்.

நேற்று அதிகாலை பட்டாசு வெடித்தும், மேளதாளம் அடித்தும் சூதாளம் பகுதியில் முகாமிட்டிருந்த 5யானைகளையும் மதகோண்டப்பள்ளி, பூனப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தொடர்ந்து யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மாந்தோப்பு அருகே முகாமிட்டிருந்த யானைகளை விரட்டியடித்ததால், கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: