திருச்சுழி அருகே கண்டெடுப்பு; 1000 ஆண்டுகளுக்கு முந்தைய யானை மீது அய்யனார் சிற்பம்: முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது

திருச்சுழி: திருச்சுழி அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும், யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என்ற தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அருப்புக்கோட்டை அருகே கரிசல்குளம் கிராமத்தில் ஒரு பழமையான சிலை இருப்பதாக தேவாங்கர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த வரலாற்றுத்துறை மாணவர்கள் ஜோஸ்வா, செல்வபாண்டி போன்றோர் கொடுத்த தகவலின்படி அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் தர், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது யானை மீது அமர்ந்த நிலையில் இருக்கும் அய்யனார் சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்து என தெரியவந்தது. இந்த சிற்பம் குறித்து அவர்கள் கூறியதாவது: பொதுவாக அய்யனார் சிற்பங்களில் யானை, குதிரை போன்ற விலங்குகள் இடம்பெறுகின்றன. அவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் இந்து, சமணம், பௌத்தம் போன்ற மூன்று மதங்களிலும் அய்யனார் வழிபாடு உண்டு. யானை வாகனமாகவோ அல்லது சிற்பங்களில் யானை இடம் பெற்று இருந்தால் அந்த வழிபாடு சமண மதத்திற்கு உரியதாக அறியப்படுகிறது.

குதிரை இடம்பெற்றிருந்தால் அது பௌத்த மதத்திற்கு உரியதாகும். எந்தவித வாகனமும் இன்றி தனியே இருந்தால் இந்து மதத்திற்கு உரியவராகிறார். மற்கலி என்பவர் சமண மத தீர்த்தங்கரர் மகாவீரரின் சமகாலத்தவராவார். இவர் பிற்காலத்தில் அய்யனார் என்று போற்றப்பட்டு வந்துள்ளார். தற்போது தமிழகத்தில் பூர்ணகலை, புஷ்கலையுடன் அய்யனார் காணப்படுவதும், யானை கோயிலின் முன் காணப்படுவதுமாக அய்யனார் கோயில்கள் உள்ளன. இவற்றில் யானை வாகனம் இடம்பெற்று வருவதால் ஒரு காலத்தில் இந்த இடங்கள் சமண மதத்தை தழுவியிருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.

காலப்போக்கில் இவை இந்து மதத்துடன் தொடர்புள்ளதாக மறுவி இருக்கலாம். மேலும் அய்யனார் கோயில்கள் அனைத்தும் சமணர்கள் வாழ்விடமாக தேர்ந்தெடுக்கும் இடங்களான நீர் நிலைகள் அருகிலேயே காணப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும். தற்போது கிடைத்துள்ள சிற்பமும் அந்த சூழல் கொண்ட இடத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி கரிசல்குளம் அய்யனார் சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. யானை மீது அய்யனார் திருமேனி இருப்பது தென் தமிழகத்தில் அரிதாகவே காணப்படுகிறது.

இந்த யானை மீது அய்யனார் உட்குதியாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். காதுகளில் பத்திர குண்டலமும், மகர குண்டலத்துடனும் இரு கைகளில் வலது கரத்தில் மலர் செண்டும், இடது கையினை கீழே தொங்கவிட்டும், மார்பில் ஆபரணமும், முப்புரி நூலும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பமாக கருதலாம் என கூறினர்.

Related Stories: