ராஜபாளையம் பகுதியில் நீர்நிலைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், குப்பைகள்: தடுப்பு நடவடிக்கை தேவை

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் உள்ள ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகளில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை அதிகம் கொட்டி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகளில் தொடர்ந்து கட்டிடக்கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையம் நகரை சுற்றி நீர்நிலைகள் அதிகம் இருக்கிறது. இவற்றில் இறைச்சி கடைகளில் உருவாகும் கழிவுகளை அதிக அளவில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.

அத்துடன் இதன் காரணமாக பலருக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தோம். இருப்பினும் அவர்கள் தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நீர் நிலைகளில் நகராட்சி பகுதிகளில் செயல்படும் இறைச்சி கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் இதுபோல் நீர் நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இதனால் இப்பகுதிகளில் இப்பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகினற்னர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு இதுபோல் நீர் ஆதாரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவற்றில் தற்போது சேர்ந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: