நீர்மட்டம் குறைவால் ஆழியார் அணையில் முதலை உலா: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதமாக மழையில்லாமல் வெயிலின் தாக்கமே அதிகமாகியுள்ளது. சில மாதமாக மழையின்றிபோனதால், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஆழயார் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மொத்தமுள்ள 120அடியான ஆழியார் அணையின் நீர்மட்டம் 58அடியாக சரிந்துள்ளது. இதனால், அணையில் தண்ணீர் குட்டைபோல் காட்சியளிக்கிறது. பெரும்பகுதி மணல் திட்டுகளாகவும், சேறும் சகதியாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், தற்போது முதலை நடமாட்டம் தெரிவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம், மணற்பாங்கான கரையிலிருந்து தண்ணீரில் ஊர்ந்து சென்ற முதலையை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அணையின் சில பகுதியில், விதிமீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதாக கூறப்படுகிறது. தண்ணீர் வற்றிய நிலையில் முதலை உள்ளிட்டவை உலா வரும் இவ்வேளையில், கரையோரம் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது எனவும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: