ராகுல் தகுதி நீக்க விவகாரத்தை கவனித்து வருகிறோம்: ஜெர்மனி வெளியுறவு துறை கருத்து

புதுடெல்லி: மக்களவையில் இருந்து  ராகுல் காந்தி  தகுதி நீக்கம்  செய்யப்பட்டதை ஜெர்மனி கவனித்து வருவதாக கூறியுள்ள நிலையில், வெளிநாட்டு சக்திகளை காங்கிரஸ் அழைப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம்  செய்யப்பட்டார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

இது குறித்து  ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ராகுல்காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன் பின் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையும் கவனித்தோம். ராகுல்காந்தி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறார். மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்த பின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா அல்லது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டத்தில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பது தெளிவாகும். நீதித்துறையின் சுதந்திரமும், அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளும் இந்த வழக்கில் பின்பற்றப்படும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது” என்றார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்  திக்விஜய் சிங்  தனது டிவிட்டர் பதிவில்,‘‘ராகுலை துன்புறுத்துவதன் மூலமாக  இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு சமரசம் செய்யப்படுகின்றது என்பதை  கவனித்ததற்காக ஜெர்மனி வெளியுறவு  அமைச்சகம் மற்றும் டியூட்ஸ்சே  வெல்லேவின் முதன்மை சர்வதேச ஆசிரியர்  ரிச்சர்ட் வாக்கர் ஆகியோருக்கு  நன்றி” என குறிப்பிட்டு இருந்தார். மேலும் ரிச்சர்ட் வாக்கர் டிவீட்   மற்றும் ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளரின் வீடியோவையும்  இணைத்திருந்தார்.  இந்நிலையில்திக் விஜய் சிங்கின் டிவிட் ஸ்கிரின் ஷாட்டை பகிர்ந்துள்ள  ஒன்றிய சட்டத்துறை அமைச்சர்  கிரண் ரிஜ்ஜூ, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக வெளிநாட்டு சக்திகளை அழைத்ததற்காக ராகுல்காந்திக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: