ஏப்ரல் 4 ல் பங்குனி உத்திர தெப்போற்சவம்; குளித்தலை அய்யர்மலை கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்: தெப்போற்சவ மண்டபத்தில் வர்ணம் பூசப்பட்டது

குளித்தலை: வருகிற 4ம் தேதி பங்குனி உத்திர தெப்போற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு குளித்தலை அய்யர்மலை தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தெப்போற்சவ மண்டபவத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அய்யர்மலையில் பிரசித்தி பெற்றது ரத்தினகிரீஸ்வரர் கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தின் போது தெப்போற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 4ம் தேதி பங்குனி உத்திர தெப்போற்சவ விழா நடைபெற உள்ளது.

இதற்கிடையில், குளித்தலை ஆர் எஸ் ரோட்டில் இருந்து பரிசல் துறை செல்லும் சாலையில் உள்ளது அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தன்று அய்யர்மலையில் இருந்து உற்சவர் சுவாமி குளித்தலைக்கு வரவழைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. பல ஆண்டு காலமாக இந்த நடைமுறை பின்பற்றாமல் இருந்த நிலையில், பக்தர்கள் உபயதாரர்கள் பெரும் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக தெப்போற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தாண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி பங்குனி உத்திரத்தன்று, குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகில் பரிசல் துறை ரோட்டில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் தெப்போற்சவம் ஏப்ரல் 4ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தற்போது தெப்பக்குளம் தண்ணீர் வற்றி இருப்பதால், முன்னேற்பாடாக மின் ஆழ்குழாயிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலையில் வைக்க முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தெப்போற்சவம் நடைபெறும் மத்திய மண்டபத்தில் வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் அனிதா மற்றும் தெப்போற்சவ குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: