பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியகுளம் பகுதி விவசாயிகள் சோத்துப்பாறை, வைகை அணை, மஞ்சளாறு அணை மற்றும் ஏரி, குளங்களை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். சோத்துப்பாறை அணைப்ப்பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக விவசாயத்திலும் மஞ்சள் ஆறு அணை விவசாய பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பசுமை பூமி என்று அழைக்கப்படும் பெரியகுளம் பகுதியில் பிரதான தொழிலாக நெல் விவசாயம் இருந்து வருகிறது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.

மேலும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அணை நீர், குளத்து நீர், ஆற்று நீர் என பல்வேறு வகையினும் விவசாயத்திற்கு ஏற்ற இடமாக பெரியகுளம் சுற்று வட்டாரப்பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பெரியகுளம் வட்டாரத்தில்- வடுகபட்டி புறவழிச் சாலை, மேல்மங்கலம்,ஜெயமங்களம் அழகர்சாமிபுரம் கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து விவசாயிகள் நேரடியாக நெல் மணிகளை கொண்டு சென்று பயன்பட்டு வந்தனர்.

மேலும் நெல்மணிகளை ஆய்வு செய்து தரம் பார்த்து பிரித்து மூட்டைகளாக தயார் செய்து வந்தனர். பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் கட்டிடங்கள் இல்லாமல் திறந்தவெளியிலேயே கொட்டி வைக்கப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் நெல் நனைந்து சேதம் அதிகம் ஏற்படுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கான ஏராளமான நன்மை பயக்கும் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை செவி சாய்த்து பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பெரியகுளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் பகுதிகளில் அரசு சார்பில் நெல் குடோவுன்களை கட்டி முறையாக பராமரிக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: