×

பும்ராவுக்கு மாற்று வீரரை விரைவில் முடிவு செய்வோம்...: எம்ஐ கேப்டன் ரோகித் நம்பிக்கை

மும்பை: ஐபில் டி20 தொடரில் களமிறங்க உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக களமிறங்க உள்ள மாற்று வீரர் யார் என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்ய உள்ளதாக அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடர், அகமதாபாத்தில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் ஏப்ரல் 2ம் தேதி நடைபெற உள்ளது.

ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக களமிறங்க முடியாதது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. பும்ராவுக்கு மாற்றாக மும்பை அணி யாரை களமிறக்கப்போகிறது என்ற கேள்வி சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆண்டுகளில் பும்ரா களமிறங்காத முதல் ஐபிஎல் சீசன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கேப்டன் ரோகித் கூறியதாவது: பும்ரா விளையாட முடியாததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது எப்படி? அவருக்கு பதிலாக களமிறக்கக் கூடிய மாற்று வீரர் யார் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். ஒரு சில நாட்களில் இதற்கான தீர்வை எட்ட முடியும் என்று நம்புகிறோம். அவர் இல்லாதது எங்களுக்கு நிச்சயம் பின்னடைவு தான். அதே சமயம், இது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி உள்ளது என்றே நினைக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக எங்களுடன் உள்ள சில இளம் வேகப் பந்துவீச்சாளர்களை பரிசீலித்து வருகிறோம். கடந்த சீசனில் காயத்தால் விளையாடாத ஜோப்ரா ஆர்ச்சர் இப்போது முழு உடல்தகுதியுடன் பந்துவீசத் தயாராகி உள்ளது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமாகும் ‘துருப்புச்சீட்டு’ வீரர் விதிமுறைக்கு ஏற்ப வியூகம் அமைக்க வேண்டி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இம்பாக்ட் பிளேயரை முடிவு செய்வது உண்மையிலேயே சவாலான விஷயம் தான்.  இவ்வாறு ரோகித் கூறியுள்ளார்.



Tags : Bumrah ,MI ,Rohit Hope , We will decide on Bumrah's replacement soon...: MI captain Rohit Hope
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு