ரூ.5.75 கோடி சொத்து பறிப்பு பாஜ நிர்வாகி மீது புகார்: பாதிக்கப்பட்டவர்கள் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர்: தாராபுரத்தில் கடன் வாங்கியவர்களிடம் ஆவணங்களை பெற்று ரூ.5.75 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் வீட்டை தெற்கு மாவட்ட பாஜ செயலாளர் ராஜா அபகரித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஒரு பெண், மாற்றுத்திறனாளி உள்பட 3 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாராபுரத்தை சேர்ந்த சிவபாலமுருகன் (41) , அவரது மனைவி சித்ரா (37) மற்றும் தாராபுரம் ஆச்சியூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாசிலாமணி (27) என்பது தெரியவந்தது.

போலீசாரிடம் சிவபாலமுருகன்-சித்ரா தம்பதி கூறியதாவது: வீடு கட்டுவதற்காகவும், குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் திருப்பூர் பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜாவிடம் ரூ.24 லட்சம் வாங்கியிருந்தோம். இதற்கு லட்சக்கணக்கில் ராஜா வட்டி கேட்டார். இதனை கட்ட முடியாமல் இருந்தோம். பணத்தை கட்ட வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறி எங்களுக்கு சொந்தமாக பழனி பைபாசில் உள்ள 2 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை கேட்டார். நாங்கள் நம்பி கொடுத்தோம். ஆனால் அவர் கடன் வாங்கி தராமல் ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தைஅபகரித்து விட்டார். இது குறித்து கேட்டால், எங்களை மிரட்டி வருகிறார். எனவே எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாற்றுத்திறனாளி மாசிலாமணி கூறும்போது, ‘‘எனது தாயாரின் மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் ராஜாவிடம் வாங்கியிருந்தேன். அவர் பலமுறை வட்டிக்கு மேல் வட்டி கேட்டு என்னை தொந்தரவு செய்தார். கடனை அடைக்க வழிவகை செய்கிறேன் எனக்கூறி ஆச்சியூரில் எனக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டு ஆவணங்களை கேட்டார். நானும் நம்பி கொடுத்தேன். ஆனால் அவர் அந்த ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி, வீட்டை அபகரித்துவிட்டார்.

மாற்றுத்திறனாளியாகிய நான் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறேன். எனவே எனது வீட்டை மீட்டு தர வேண்டும்’’ என்றார். புகார் கூறப்பட்டுள்ள பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கடந்த நவம்பர் மாதம் பணியில் இருந்த ரமேஷ் என்ற போலீஸ்காரரை ஒருமையில் பேசி மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காங்கயம் போலீசார் ராஜா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: