வறண்டு காணப்படும் வெள்ளாறு வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிட கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டும் மழை நீர் வெள்ளமாக மாறி ஒரு லட்சம் கனஅடி வரை அணைக்கட்டு பாலத்தின் வழியாக வடிகாலாகி பரங்கிப்பேட்டை பகுதி கடலுக்கு சென்றடையும். அதுபோன்ற காலங்களில் சில மாதங்கள் ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டு இருக்கும். அப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய போர்வெல், குடியிருப்பு போர்வெல் அதிகளவு தண்ணீரை வெளியேற்றும்.

நீர்வரத்து குறைந்து வெள்ளாறு வறண்ட நிலைக்கு மாறும்போது நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கிவிடும். அதுபோன்ற சமயங்களில் சென்னைக்கு குடிநீர் செல்வதற்கு முந்தைய காலகட்டங்களில் வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்த விடப்படுவது வழக்கமாக இருந்தது. அதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைவில்லாமல் இருந்தது.

தற்போது சென்னைக்கு குடிநீர் செல்வதால், வெள்ளாற்றில் வீராணம் ஏரியின் உபரி நீரை திறந்துவிடுவதே இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கி விடுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், வீராணம் ஏரியில் இருந்து உபரி நீரை திறந்துவிட வேண்டும் என குடியிருப்புவாசிகளும், விவசாயிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: