காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் அன்னதானம்: பக்தர்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கீரைகளை பயன்படுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இறையருள் பெற கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் அன்னதான திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் தற்போது 750க்கும் மேற்பட்ட கோயில்களில் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜவீதியில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலிலும் இந்த திட்டத்தின் கீழ், சுமார் 50 முதல் 75 பக்தர்கள் தினந்தோறும் உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் பின்புறம் உள்ள குளத்தை சுற்றி சுமார் 2 சென்ட் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் அன்னதான திட்டத்தில் பணியாற்றும் பணியாளரை கொண்டு இந்த தோட்டம் பராமரிக்கப்படுகிறது. இந்த அன்னதான திட்டத்திற்கு கோயிலின்  பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும்  காய்கறிகள், கீரைகளை பயன்படுத்துவதால் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, ‘கோயிலில் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டத்திற்கு தோட்டத்தில் இயற்கை முறையில், விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகளை முடிந்த அளவுக்கு பயன்படுத்தி கொள்கிறோம். இதற்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது’ என்றார்.

அப்போது, தோட்டத்தை பராமரித்து வரும் அன்னதான திட்ட பணியாளர் ஒருவர் தெரிவித்ததாவது: இந்த கோயில் இடத்தின் ஒரு பகுதியில் முதன் முதலில் பூந்தோட்டம் அமைத்து பராமரித்தோம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதைப்பார்த்து ரசித்தனர். இது எனக்கு உற்சாகத்தை தந்தது. எனவே, காலியாக உள்ள  மற்றொரு பகுதியில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். உடனடியாக அதற்கு தேவையான சொட்டு நீர் பாசனம், குழாய்கள், இயற்கை உரம், விதை என அனைத்தையும் ஆர்வமுடன் முன்னின்று செயல் அலுவலர் தியாகராஜன் செய்து கொடுத்தார்.

மேலும், இணை ஆணையர் வான்மதி செடிகள், மரக்கன்றுகள் வாங்கி கொடுத்தார். அதன்மூலம் தற்போது, சுரைக்காய், கத்தரி, வெண்டை, கொடி அவரை, செடி அவரை, மிளகாய், முள்ளங்கி என காய்கறிகள், பருப்பு கீரை, மணத்தக்காளி, பசலைக்கீரை என பல்வேறு கீரைகளை பயிரிட்டு வருகிறோம். முடிந்தவரை இந்த காய்கறிகள், கீரைகளை அன்னதான திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்கிறோம். இதனால், பக்தர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுவையான உணவு அளிக்கும் மனநிறைவு ஏற்படுகிறது’ என்றார்.

Related Stories: