மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிறுத்திய கலெக்டர்: திருப்பத்தூரில் பரபரப்பு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை கலெக்டர் உள்ளே வர அனுமதி மறுத்து 30 நிமிடம் வெளியே நிற்க வைத்தார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் அதிகாரிகள் அனைவரும் காலை 9 மணிக்கு முன்னதாகவே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

ஆனால் அதிகாரிகள் பலர் காலதாமதமாக வந்தனர். இதையறிந்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன், தாமதமாக வந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம். வெளியே நில்லுங்கள் என உத்தரவிட்டார். ஆனால் தொடர்ந்து குறைதீர்வு கூட்டத்தை நடத்தினார். இதில் ஒரு சில அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்திற்கு தாமதமாக வந்த அலுவலர்கள் சுமார் 30 நிமிடம் வரை கூட்ட அரங்கின் வெளியே நின்றிருந்தனர். இதையடுத்து  தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்து கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார்.

Related Stories: