வத்தலக்குண்டு அருகே முருங்கை வருமானம் முடங்கியதால் கலர் மீன் பண்ணை வைத்து கலக்கும் விவசாயிகள்

*துவண்ட வாழ்க்கை செழிப்பானது

*கடனுதவி வழங்க கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே கலர் மீன் பண்ணை வைத்து விவசாயிகள் கலக்கி வருகின்றனர். முருங்கை விவசாயத்தால் துவண்ட அவர்களின் வாழ்க்கை, இந்த புதிய முயற்சியால் செழிப்பாகியுள்ளது. தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மீன்கள் வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை, அவரை போன்ற விவசாயங்கள் நடந்து வருகிறது. இவ்விவசாயங்களில் முருங்கைக்காய், அவரைக்காய் விலை எதிர்பாராவிதமாக பல நேரங்களில் வீழ்ச்சியடைகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உருவாகிறது. மேலும் இந்த பகுதியில் ஆறுகள் எதுவும் இல்லாததால் கண்மாய் தண்ணீரை மட்டுமே நம்பி இவர்கள் விவசாயம் செய்யும் நிலை உள்ளது. இப்பகுதியில் பலத்த மழை பெய்தால் மட்டுமே இந்த கண்மாய்கள் நிரம்பும். மழை பெய்யாத நிலையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் வந்து சேரும்.

ஆசியாவின் மிகப்பெரிய தொங்குதொட்டி பாலம் 58ம் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு கண்மாய்கள் நிரம்பவேண்டிய நிலை உள்ளது. தற்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் இங்குள்ள விருவீடு கண்மாய் தவிர, மற்றவை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாலும், முருங்கை, அவரை விலை திடீரென்று வீழ்ச்சி அடைவதாலும் நஷ்டமடைந்த விருவீடு பகுதி விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்களது விவசாய நிலங்களில் கலர் மீன்களை வளர்க்கும் பண்ணை அமைத்து வருகின்றனர்.

இவர்களின் கலர் மீன் பண்ணையில் கோல்டு மூஸ், பலூன் மாலி, சார்க், ஜீப்ரா, புளோரா போன்ற பலவகை மீன்களை வளர்க்கின்றனர். குறிப்பிட்ட அளவு மீன்கள் வளர்ந்ததும், அவற்றை கேரள மாநிலம் ஆலப்புழா, சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயத்தினால் ஏற்பட்ட நஷ்டங்களை சீரமைத்து வாழ்க்கையை அவர்கள் ஓரளவு நிம்மதியாக கழித்து வருகின்றனர். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கலங்கிய விவசாயிகள் கலர் மீன் பண்ணையால் கலகலப்பாகி உள்ளனர்.

விருவீடு பகுதியில் கலர் மீன் பண்ணை நடத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதன்படி தற்போது விருவீட்டை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னையிலே கலர் மீன் வளர்க்கும் தொழில் செய்வது குறிப்பிடத்தக்கது. மீனுக்கு உரிய உணவு கிடைக்காவிட்டாலும், எளிதில் கிடைக்கும் பன்ரொட்டியை உணவாக அளிக்கின்றனர். மீன் வளர்க்கும் தொழில் எளிதாக இருப்பதுடன், வருமானமும் கிடைப்பதாக இருப்பதால் எதிர்காலத்தில் கலர் மீன் பண்ணைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மெல்ல மெல்ல தொழிலதிபர்களாக மாறி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு மீன் வளர்ப்பு தொழிலுக்கு அதிக அளவில் கடனுதவி செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கலர் மீன் பண்ணை நடத்தும் விவசாயி சுரேஷ் கூறியதாவது: நான் முருங்கை விவசாயி. சில சமயம் முருங்கைக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் சில நாட்களில் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல விலை கடும் வீழ்ச்சியடையும். இதுபோன்ற நேரங்களில் நஷ்டம் என்பது கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்னையாக இருந்து வந்தது. இது தொடர்ந்தநிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கலர் மீன்கள் வளர்க்கும் பண்ணையை கடன் வாங்கி துவக்கினேன்.

அதில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.முருங்கையால் வெறுங்கையாகி நொறுங்கிப் போன என்னை போன்ற பலரது வாழ்க்கை இப்போது கலர் மீன்களால் செழிப்பானதாக மாறி இருக்கிறது. மீன்களை போல நாங்களும் மகிழ்ச்சியில் நீந்துகிறோம். தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் கலர் மீன்கள் வளர்க்க பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியுடன் கலர் மீன்கள் வளர்க்கும் தொழிலுக்கு அரசு மானியத்துடன் அதிக கடனுதவி வழங்கினால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: