வேலைக்கு ஆளும் கிடைக்கல... போதிய விலையும் கிடைக்கல... மரங்களில் வெடித்து சிதறும் ‘இலவம்பஞ்சு’

*இலவு காத்தக் கிளியாக விவசாயிகள்

வருசநாடு : கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் வேலையாட்கள் பற்றாக்குரை மற்றும் போதிய விலை கிடைக்காத காரணத்தால் இலவம் பஞ்சுகள் மரங்களில் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளிலும் இலவம்பஞ்சு விவசாயம் சுமார் 50, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டு விவசாயம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழை யின் காரணமாக இலவம் பஞ்சு இலவ மரங்களில் வெடித்து சிதறி வருகிறது. மேலும் இப்பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாகவும் விலை குறைவின் காரணமாகவும் இலவம்பஞ்சு அடிப்பதற்கு விவசாயிகள் முன் வரவில்லை மேலும் விவசாயிகள் கூலிக்கு கட்டுபடியாகமல் உள்ளது. இதனால் மரங்களில் உள்ள இலவம்பஞ்சுகளை பறிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் சில இடைத்தரகர்கள் இலவம் பஞ்சு விலை குறைத்து விட்டார்களா? என கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளி மாவட்டங்களில் இருந்து இலவம்பஞ்சு கொள்முதல் செய்வதற்கு அதிகளவில் வியாபாரிகள் வந்து சென்றார்கள். ஆனால் இங்குள்ள இடைத்தரகர்கள் இலவம்பஞ்சுவை தாங்களே கொள்முதல் கொடுப்பதாக கூறி வெளியிலிருந்து வரக்கூடிய வியாபாரிகளை தடுத்து நிறுத்துவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மற்றும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவ பஞ்சு நிர்ணய விலை கிடைப்பதற்கும் விவசாயிகளை பாதுகாப்பதற்கும் உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மலை கிராமத்தைச் சேர்ந்த இலவம் பஞ்சு விவசாயிகள் கூறுகையில், அரசரடி, காந்திகிராமம் ,நொச்சிஓடை, ஓயாம்பாறை, அண்ணாநகர் கோடாலியூத்து, தண்டியகுளம், உள்ளிட்ட பகுதிகளில் முறையான தார்ச்சாலை வசதிகள் இல்லை இந்த சாலை வசதி இல்லாத காரணத்தால் மாட்டுவண்டிகள் தலைசுமைகள்மூலமும் கோவேரிகழுதைகள் மூலமும் அதிக வாடகை கொடுத்து தரைப்பகுதிக்கு லாரிகளில் இலவம் பஞ்சுகளை ஏற்றும் நிலையில் உள்ளனர்.

இதனால் கூடுதல் செலவு அதிகரிப்பின் காரணமாக இலவம் பஞ்சுகளை மரத்தில் அடிக்காமல் விட்டு விட்டோம். மேலும் இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது ஒரு கிலோ பஞ்சின் விலை ரூபாய் 50 முதல் 55 ரூபாய் வரை விலை போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் கடந்த ஆண்டு இதே மாதங்களில் ஒரு கிலோ பஞ்சு ரூ.100 முதல் 110 ரூபாய் வரை விலை போய்க்கொண்டிருந்தது. ஏன் இலவம் பஞ்சு விலை குறைந்தது என விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள் இதற்கு காரணம் இடைத்தரர்களா? அல்லது வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சு ஏற்றுமதி அதிகளவில் வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே அரசே கொள்முதல் செய்வதற்கும் நிர்ணய விலை கிடைத்திடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: