திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் பூ மார்க்கெட்

* ₹30 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது

* நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ₹30 கோடி மதிப்பில் 249 கடைகளை கொண்ட ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில், நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சு.ராஜாங்கம், ஆணையாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் இந்து புகழேந்தி, ஜோதி, சீனுவாசன், பிரகாஷ், சுமதி அருண்குமார், சந்திரபிரகாஷ், அல்லி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: திருவண்ணாமலை நகராட்சியில் தற்போது  மாட வீதியில் செயல்படும் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. போதுமான இட வசதியின்றி, நெரிசலான இடத்தில் உள்ளது. அதனால், பவுர்ணமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, 146 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள, சுமார் 1.65 லட்சம் மக்கள் வசிக்கும் திருவண்ணாமலை நகரில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அவசியமாகிறது. எனவே, கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 2.67 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ₹30.10 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கா்ய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்ெகட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகத்தின் தரைதளத்தில் 128 கடைகள் அமைக்கப்படும். அதில், காய்கறி கடைகள் இயங்கும். முதல் தளத்தில் 121 கடைகள் அமைக்கப்படும். அதில், பூக்கடைகள் மற்றும் பழக்கடைகள் இயங்கும். அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.மேலும், நகர்புற புத்துணர்வு மற்றும் நகர்புற மாற்றத்துக்கான திட்டத்தின் கீழ், செட்டிக்குளம், சிம்மத்தீர்த்தம் ஆகியவற்றை புனரமைக்கும் பணி ₹92 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

ேமலும், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சியில் பாதாள சாக்கடை சீரமைப்பு மற்றும் வடிகால் வசதி போன்ற பணிகள் முறையாக நடைபெறவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் தரப்பில் புகார் தெரிவித்தனர். அதற்கு, திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தனர். அதனால், சிறிது நேரம் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, நகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories: