அம்ரித்பால் சிங் தலைமறைவு? நேபாள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

காத்மாண்டு: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் தலைமறைவாகி உள்ளார் என கூறப்படுகிறது.  அவரை அங்கிருந்து தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி நேபாளத்துக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். காலிஸ்தான்  ஆதரவாளரான இவர் வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இவரை  கைது செய்ய 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அம்ரித்பால் தற்போது நேபாளத்துக்கு தப்பிச் சென்று உள்ளதாக  உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து இந்திய பாஸ்போர்ட் அல்லது வேறு  பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஏதாவது ஒரு நாட்டுக்கு தப்பி செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என  நேபாள அரசுக்கு  ஒன்றிய அரசு  வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து நேபாள பத்திரிகை காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், அம்ரித் பால் நேபாளத்தில் தலைமறைவாக உள்ளார்.  அவர் இந்திய பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் மூலமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்றால் அவரை கைது செய்ய வேண்டும் என இங்கு உள்ள இந்திய தூதரகம் நேபாள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அம்ரித்பாலின் தனிப்பட்ட விவரங்கள் பற்றி  ஓட்டல்கள்,விமான நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: