நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தாய் பலியான மறுநாளே மகளுக்கு திருமணம்: தாயாக இருந்து காப்பதாக மணமகன் உறுதி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மகளின் திருமணத்துக்கு முதல்நாள் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் உடல் இரவோடு, இரவாக தகனம் செய்யப்பட்டது. திருமணமும் திட்டமிட்டபடி மறுநாள் சோகத்துடன் நடந்து முடிந்தது.

நாகர்கோவில் கீழ பெருவிளையை சேர்ந்தவர் சண்முகவேல். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவரது மனைவி சாந்தி (51). இவர்களுக்கு 3 மகள்கள். மூத்த மகளுக்கும், எள்ளுவிளையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று (27ம்தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம்  உணவு தயாரிக்க சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. ஊர் பிரமுகர்கள், உறவினர்கள் கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்க வேண்டாம், திட்டமிட்டப்படி திருமணத்தை நடத்துவோம் என கூறினர்.  

எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் உத்தரவின்படி இரவோடு, இரவாக பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி இரவு 9 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதன் பின்னர் நாகர்கோவில் புளியடியில் உள்ள எரிவாயு தகன மேடையில் இரவிலேயே தகனம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று காலையில் திட்டமிட்டப்படி திருமணம் நடைபெற்றது. கண்ணீருடன் மணமேடையில், மணமகள் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அவரது கரத்தை பிடித்து, உனக்கு தாயாகவும் இருந்து கவனித்துக் கொள்வேன். நீ கலங்காதே என்று மணமகன் ஆறுதல் கூறினார். திருமணம் சோகத்துடன் நடந்தேறியது.

Related Stories: