குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: தொழிலாளர் நல கலந்துரையாடலில் கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று தொழிலாளர் நல கலந்துரையாடலில் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூரில் மாவட்ட அளவிலான செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடையே தொழிலாளர் நலன் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செங்கல் உற்பத்தியாளர்கள் மத்திய சங்கத் தலைவர் ராமராவ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 3 மாதங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காகவும், செங்கல் உற்பத்தியாளர்கள் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முதலாவதாக  செங்கல் சூளைகளில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதில்லை என புகார் வந்தது. அதனடிப்படையில் உற்பத்தியாளர் சங்கங்களுடன் கலந்தாலோசித்து அனைத்து தொழிலாளர்களுக்கும் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை, எவ்வளவு ஊதியத்தில் பணி செய்யப்படுகிறீர்கள் என்ற விவரத்துடன் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  அனைத்து தொழிலாளர்களுக்கும், பணி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட வேண்டும். இந்த விதிகளை கடைப்பிடிக்காத இடங்களில் அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.  இரண்டாவதாக செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்கள் வேலையளிப்பவர்களின் உரிமையாளர்கள் கட்டாயமாக https:labour.tn.gov.in/iexam என்ற வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மூன்றாவதாக தமிழ்நாட்டு தொழிலாளர்கள் யாரெல்லாம் பணியாற்றுகிறார்களோ அவர்களின் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டும்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து செங்கல் சூளைகளின் பெயர்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்ச ஊதியம், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவசர உதவி எண்கள் அடங்கிய தகவல் பலகை வைத்தல் போன்ற முயற்சிகளை எடுத்துள்ளோம். இந்த முயற்சி கடந்த வருடத்தில் ஆரம்பித்த ஒன்று. இந்த முயற்சி இந்த வருடம் 100 சதவீதம் செங்கல் சூளைகளிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருக்கும்போது தமிழில் தகவல் பலகையும் வேறு மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் அவர்கள் மொழியிலும் தகவல் பலகை அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில்  ஊதியம் வழங்க வேண்டும்.  செங்கல் சூளைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள்  தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை சூளையின் உரிமையாளர்கள் உறுதி செய்வது கடமையாகும்.  

வெளிமாநில தொழிலாளர்களில் சுமார் 3,300 குழுந்தைகளுக்கு ஒரியா, பெங்காலி என அந்தந்த மொழிகளில் பாடங்கள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கொத்தடிமை தொழிலாளர்களின் முறை ஒழிப்பு குறித்தும், பிற மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் விளக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடையே தொழிலாளர் நலன் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தொழிலாளர் நலன் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, செங்கல் சூளைகளில் பணி புரியும் தொழிலாளர்களை முறைப்படுத்தும் பொருட்டு, உரிமையாளர்கள் மூலமாக தொழிலாளர்களுக்கான பணி நியமன கடிதங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Related Stories: