விவசாய தொழிலாளர்களை ஒன்றிய அரசு வஞ்சித்து விட்டது: முத்தரசன் விமர்சனம்

சென்னை: விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிய பாஜ அரசு வஞ்சித்து விட்டதாக முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜ அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கி, அழித்தொழிக்கும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு தலா 100 நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூபாய் 2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து வந்த ஒன்றிய பாஜ அரசு வரும் 2023-24ம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது.

இதில் கடந்த ஆண்டுகளில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதியப் பாக்கிக்காக ரூ.17 ஆயிரம் கோடி வழங்கி விட்டால், மீதியுள்ள ரூபாய் 43 ஆயிரம் கோடியை வைத்து இரு வாரங்களுக்கு கூட வேலை வழங்க இயலாது என்பதை விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் மதிப்பிட்டு கூறி வருகின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான அளவில் உயர்த்தாமல், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: