காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பெட்டிக்கடை வைப்பதற்காக மாற்றுத்திறனாளிக்கு ரூ.80 ஆயிரம் நிதியுதவியினை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில், திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து, 232 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில், நேற்று காஞ்சிபுரம் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் வட்டம், சிறுனைபெருகல் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி சரண்யா பெட்டிக்கடை வைக்க உதவித்தொகை வழங்க மனு அளித்ததையொட்டி, மனுவின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உதவிதொகை பெற தகுதி உடையவர் என்பதால், உடன் நடவடிக்கை எடுத்து, மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.80 ஆயிரம் காசோலையினை வழங்கினார்.
