காட்டு யானைகள் மோதலில் தந்தம்குத்தி ஆண்யானை பலி

ஈரோடு: அந்தியூர் அருகே இரண்டு காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தந்தம் குத்தி மற்றொரு யானை இறந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபர்கூர் காப்புக்காடு, தண்டா வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து யானை இறந்தது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் ராஜா மற்றும் கால்நடை மருத்துவர்கள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து யானையை பிரேத பரிசோதனை செய்ததில் 2 ஆண் யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மற்றொரு யானையின் தந்தம், இறந்த ஆண் யானையின் தலையில் குத்தப்பட்டு இறந்தது தெரியவந்தது. இறந்த ஆண் யானையின் வயது 40. பிரேத பரிசோதனைக்கு பின்பு யானையின் உடலை வனத்துறையினர் அங்கேயே மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக விட்டு வந்தனர்.

மேலும் யானையிடம் இருந்து சுமார் 5 அடி நீளம் உள்ள ஒரு ஜோடி தந்தங்கள் எடுக்கப்பட்டு சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் அந்தியூர் வனச்சரத்திற்கு உட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு பகுதியில் குட்டியுடன் தாய் யானை இறந்து கிடந்த நிலையில், தற்போது சென்னம்பட்டி வனச்சரகப்பகுதியில் 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது வன உயிரின ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: