பார்த்திபனூர் அருகே பாண்டியர்கால பெருமாள் சிலைகள் கண்டுபிடிப்பு

பரமக்குடி: பார்த்திபனூர் அருகே பாண்டியர்கால பெருமாள்,விநாயகர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பார்த்திபனூர் அருகே மேலல் பெருங்கரை கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் அபிஷேக் தகவல் கொடுத்தார். அதன்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்களான தர், முனைவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்த போது, அந்த சிற்பங்கள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு பெருமாள் சிற்பமும், விநாயகர் சிற்பமும், இடைக்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இரண்டு முருகன் சிற்பம்,சேத்திர பாலர் சிற்பமும் கண்டறியப்பட்டது.

மேலும் அவர்கள் கூறியதாவது, ‘‘பெருமாள் சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரத்துடனும் வலது மேற்கரத்தில் சக்கரமும் இடது மேற்கரத்தில் சங்கும், வலது முன் கரத்தில் அபயகஸ்தமும், இடது முன் கரத்தை ஊறுகஸ்தமாகவும் தலையில் கிரீட மகுடமும், மார்பில் ஆபரணங்களுடன் முப்புரி நூலும் சுகாசன கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் முற்றுப்பெறாமல் பாதியிலேயே கைவிடப்பட்ட சிற்பமாக காணப்படுகிறது.

முருகன் சிற்பங்கள் மூன்றடி உயரத்தில் நான்கு கரத்துடன், இரண்டு முருகன் சிற்பங்கள் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும், மார்பில் ஆபரணங்களுடன் சன்ன வீரத்துடனும் கரங்களில் சக்தி ஆயுதமும் வஜ்ராயுதத்துடனும் நின்ற கோலத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது இடைக்கால பாண்டியர்காலத்தைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம். சேத்திரபாலர் சிற்பம் மூன்றரை அடி உயரத்தில் நான்கு கரத்துடனும் செதுக்கப்பட்டுள்ளது. கரங்களில் சூலம்,கபாலம்,பாம்பு போன்ற ஆயுதத்துடன் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமும் இடைக்கால பாண்டிய காலத்தைச் சேர்ந்த கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் சிற்பங்களை வைத்து பார்க்கும் போது முற்கால பாண்டியர் காலத்திலிருந்தே இப்பகுதிகளில் ஒரு சிவன் கோயில் சிறந்து விளங்கியதை காணலாம்.

தற்போது வரை இந்த கோயில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பாண்டிய தேசத்தை பொருத்த அளவில் முற்கால பாண்டியர்களின் சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க்கும் போது முற்கால பாண்டியர்கள் ஆன்மீகப் பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர்’’ என கூறினார்கள்.

Related Stories: