சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (27ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். 10 நாள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெற வில்லை.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் திருவிழாவுக்கான சுத்திகிரியைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும். தொடர்ந்து காலை 9.45க்கும், 10.45க்கும் இடையே திருவிழா கொடி ஏற்றப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் திருவிழா கொடியை ஏற்றுவார்கள். நாளை (28ம் தேதி) முதல் உற்சவ பலி நடைபெறும். 9ம் நாளான ஏப்ரல் 4ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் பம்பையில் ஆராட்டும் நடைபெறும். ஆராட்டு முடிந்த பின்னர் அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடையும்.

Related Stories: