75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: சேலத்தில் ரயில்வே இணை அமைச்சர் தகவல்

சேலம்: நாட்டின் 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனபென் ஜர்தோஷ் கூறினார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒன்றிய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனபென் ஜர்தோஷ் நேற்று வந்தார். சேலம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.அத்திட்டத்திற்கான வரைபடத்தை காட்டி,கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா விளக்கமளித்தார். பின்னர், ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனபென் ஜர்தோஷ் நிருபர்களிடம் கூறியதாவது:நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களை தேர்ந்தெடுத்து, அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சேலத்தை பொறுத்தளவில், ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படவுள்ளது.

    

அதேபோன்று தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் இயக்கப்படும். தமிழ்நாட்டில் தேவைப்படும் இடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியபின் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது,கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பூபதிராஜா,கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வை முடித்ததும் அமைச்சர்,கோவைக்கு தனி ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: