காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு; 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை வசந்தம்நகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு குருவிமலை, வளத்தோட்டம் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.  கோயில் திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாணவேடிக்கை மற்றும் சிறிய ரக பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 22ம்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற 27க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 12 மணியளவில் பட்டாசு குடோனுக்கு வெளியில் காயவைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப் பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்து, குடோனுக்கு பரவியது. இதனால் பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. சத்தம் கேட்டு பதறியடித்துகொண்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வந்த அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். ஆனால், சம்பவ இடத்திலேயே 3  தொழிலாளர்கள் பலியானார்கள். மீதமுள்ள 24 பேர் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஒருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 5 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வளத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் (50), கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (35) ஆகியோர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இருவர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: