சின்னாளபட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரானது பருத்தி

நிலக்கோட்டை: சின்னாளபட்டி பகுதியில் பயிரிடப்பட்ட பருத்தி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னாளாபட்டியை சுற்றியுள்ள நடுப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்துள்ளதால் கிணற்று பாசன விவசாயிகளும் ஆர்வமுடன் பருத்தியை கூடுதல் பரப்பில் பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் வேளாண்மை துறை பரிந்துரையின் பேரில் சுமார் 125 முதல் 135 நாட்களில் விளைந்து மகசூல் தரக்கூடிய மிக நீண்ட இழை பருத்தி வகையை சேர்ந்த கோ-17 ரகம், அதிகளவில் பயிரிட்டுள்ளனர். அதேபோல அதிக மகசூல் தரக்கூடிய எம்சியு- 5, எம்சியு- 7, கோ- 14, கோ- 17, கோ-14 உள்ளிட்ட ரகங்களும் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு அதிக மழை போன்றே கடந்த சில தினங்களாக வெயிலும் கடுமையாக வாட்டி வதைப்பதால், நன்கு விளைந்துள்ள பருத்தி பயிர்கள் அறுவடைக்கு தயாராக வெடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் காலையில் இதமான காற்றும், பிறகு வெயிலும் என மாறி மாறி வரும் கால நிலைக்கு ஏற்ப பருத்தி கலர் குறையாமல் உரிய தரத்துடன் உள்ளது. இதனால் அதிக விலை கிடைக்கும் என நம்புகிறோம். கோடை மழைக்கு முன்பாக பருத்தியை அறுவடை செய்து விடுவோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: