மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்கு தகுதி பெற்றார். 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (27 வயது, 10வது ரேங்க்) மோதிய பியான்கா (22 வயது, 31வது ரேங்க்) 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச் (26 வயது, 9வது ரேங்க்) அதிரடியாக விளையாடிய 6-1, 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசை (20 வயது, 53வது ரேங்க்) மிக எளிதாக வீழ்த்தினார்.